கடன் தொல்லையால் விபரீத முடிவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை

by Nishanth, Dec 18, 2020, 20:27 PM IST

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திருவனந்தபுரம் அருகே நடந்து உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது சிறையின்கீழ் கிராமம். இப் பகுதியை சேர்ந்தவர் சுபி (51). இவரது மனைவி தீபா குமாரி (41). இவர்களுக்கு அகில் (17) என்ற மகனும், ஹரிப்பிரியா (13) என்ற மகளும் இருந்தனர். அகில் அங்கு உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். ஹரிபிரியா 7ம் வகுப்பு படித்து வந்தார். சுபி கடந்த பல வருடங்களாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து இவருக்கு வேலை பறிபோனது.

இதையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் இவர் ஊருக்கு திரும்பினார். பின்னர் வீட்டுக்கு அருகே ஒரு சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சுபிக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது வீட்டில் வளர்த்து வந்த நாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நான்கு பேரும் படுக்கை அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர்.

இதுகுறித்து சிறையின்கீழ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தங்களுடன் தாங்கள் செல்லமாக வளர்த்த நாயையும் அழைத்து செல்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

You'r reading கடன் தொல்லையால் விபரீத முடிவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை