காஷ்மீரில் சாலை முழுவதும் பனி மூடி இருந்ததால் பிரசவ வலியில் துடித்த பெண்ணை ராணுவ வீரர்கள் நான்கு மணி நேரம் தோள்களில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனி பயங்கரமாக பொழிந்து வருகிறது. இதனால் சாலை முழுவதும் முழங்கால் வரையிலும் பனி சூழ்ந்துள்ளது. குப்வாரா மாவட்டத்தை சார்ந்தவர் ஷப்னம் பேகம். இவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த பனி பொழிவில் எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று அவரது குடும்பத்தார்கள் குழம்பி இருந்தனர்.
அப்பொழுது இந்திய ராணுவ வீரர்கள் ஷப்னம் பேகத்தை கட்டில் மேல் படுக்க வைத்து நான்கு மணி நேரமாக பயங்கர பனி பொழிவில் தோள்களில் சுமந்து சென்று அப்பெண்ணை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஷப்னம் பேகத்துக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். அதுமட்டும் இல்லாமல் இணையதளத்தில் ராணுவ வீரர்கள் கர்ப்பிணி பெண்ணை சுமந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.