கல்வி நிலையம் ஒன்றில் மாணவியரின் மொபைல் எண்களை டெலிகிராம் குழு மூலம் கண்டுபிடித்த சில நபர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்ததை அறிந்து, அந்தக் கல்வி நிலையம் டெலிகிராம் குரூப்பின் பிரைவசி செட்டிங்ஸை மாற்றியுள்ளது. அறிமுகமில்லாத நபர்கள் நம் மொபைல் எண்ணை டெலிகிராம் குழுக்கள் மூலம் கண்டுபிடித்து தொல்லை கொடுப்பதை தவிர்ப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வது அவசியம். நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுத்தால், பெரிய டெலிகிராம் குழுவில் இணைந்தால் சில தனியுரிமை பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
உங்கள் எண்ணை மறைத்துவிடுங்கள்
பயனர் குறியீட்டை (User ID) பயன்படுத்தி, தொலைபேசி எண் இல்லாமல் டெலிகிராமில் செய்தி பகிர முடியும். டெலிகிராமில் தொடர்பு கொள்ள யாராவது உங்கள் எண்ணை கேட்டால் டெலிகிராம் பயனர் குறியீட்டை (User ID) கொடுத்தால் போதுமானது. உங்கள் டெலிகிராம் புரொஃபைலுக்கு சென்று ஒரு குறியீட்டை (ID) உருவாக்கிக் கொள்ளுங்கள். பயனர் குறியீட்டை உருவாக்கிய பின்னர், பிரைவசி அண்ட் செக்யூரிட்டி செட்டிங்ஸ்க்கு சென்று உங்கள் தொலைபேசி எண்ணை 'Nobody' என்று மாற்றுங்கள். இப்படிச் செய்தால் டெலிகிராமில் யாராலும் உங்கள் தொலைபேசி எண்ணை அறிந்துகொள்ள இயலாது.
யார் உங்கள் புரொஃபைலை பார்க்கலாம்?
ஒருவேளை நீங்கள் புரொஃபைல் படம் பயன்படுத்தாமல் இருக்கலாம். யாரெல்லாம் புரொஃபைல் படத்தை பார்க்கலாம் என்பதையும் நீங்கள் அனுமதிக்கலாம். பிரைவசி செட்டிங்ஸ் சென்று புரொஃபைல் போட்டா தெரிவில் 'Everyone' என்பதிலிருந்து 'My Contacts' என்று மாற்றவும். உங்கள் புரொஃபைல் போட்டோ பார்க்கக்கூடியவர்களை நீங்கள் ஒவ்வொருவராகவும் (manually) தடை செய்யலாம்.
அறிமுகமில்லாதவர்களுக்குத் தடை
பிரைவசி செட்டிங்ஸ் மூலம் நீங்கள் ஒட்டுமொத்தமாக அழைப்புகளை நிராகரிக்கலாம். யார் உங்களை டெலிகிராம் மூலம் அழைக்கலாம் என்பதையும் தெரிவு செய்யலாம். அறிமுகமில்லாதவர்கள் உங்களை அழைக்கக்கூடாது என்றால் 'My Contacts' என்பதை தெரிவு செய்யவும். அறிமுகமில்லாத அந்நியர்களின் எண்களை உங்கள் தொடர்பு பட்டியலில் சேமிக்கவேண்டாம்.
ஃபார்வேர்டட் மெசேஜ்களுக்கு நோ
ஃபார்வேர்ட் மெசேஜாக அனுப்பி கொண்டிருப்பதை தடை செய்ய டெலிகிராம் அனுமதிக்கிறது. பிரைவசி செட்டிங்கில் அதற்கான தெரிவை செய்யலாம்.
குரூப்களில் சேர்க்கத் தடை
டெலிகிராம் குரூப்களில் உங்களை கண்டவர்களும் சேர்ப்பதை நீங்கள் தடுக்கலாம். இதற்கான தெரிவும் பிரைவசி செட்டிங்ஸ் பிரிவில் உள்ளது. உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் உங்களை டெலிகிராம் குழுக்களில் சேர்க்கும்படி தெரிவு செய்யலாம். குறிப்பிட்ட நபர்கள் உங்களை குழுக்களில் சேர்ப்பதை நீங்கள் தடை (block) செய்ய முடியும்.