சகாயம் ஐஏஎஸ் பணியில் நேர்மையாகப் பலமுறை அதிகாரிகளில் முதலிடத்தில் இருப்பவர். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்கள். அந்த எல்லையைக் கடந்திருக்கிறார் சகாயம். அதனால்தான் எனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். அதிலும் கூட அவருக்கு ஏராளமான சிக்கல்கள். என்ன நடந்தது? சகாயம் சொல்வது என்ன? விரிவாக பார்ப்போம்.தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக ஏழு ஆண்டுகள் இருந்து வந்த சகாயம் கடந்த ஜனவரி 6ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி விருப்ப ஓய்வு வேண்டி அரசிடம் விண்ணப்பித்திருந்தார் சகாயம். ஆனால் சரியாக அதிலிருந்து 100 நாட்கள் கழித்தே அவரை பணியில் இருந்து விடுவித்து இருக்கிறது தமிழக அரசு.
அரசுப் பணியில் இருந்து விடுவிப்பது தொடர்பான என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டது. மனநிறைவைக் கொடுத்தாலும் என்னை விடுவித்த முறை வருத்தமடைய வைத்தது. விருப்ப ஓய்வு கேட்டு நான் தலைமைச் செயலாளரிடம் கொடுத்த விண்ணப்பத்தில் டிசம்பர் 30 அல்லது ஜனவரி 30 இந்த இரு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் விடுவிக்குமாறு கேட்டிருந்தேன். டிசம்பர் 30 என்பது விண்ணப்பித்து 90 நாட்கள் என்ற கணக்கு. ஜனவரி 30 மகாத்மா காந்தியின் நினைவு நாள். காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் நான் அவரது பிறந்த நாளில் விண்ணப்பித்து அவர் மறைந்த நாளில் ஓய்வு பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
அந்த காந்திய சிந்தனையுடன் வெளியில் வர நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை பொதுவாக இப்படி விருப்ப ஓய்வு பெற்றவர்களிடம் உங்கள் முடிவில் ஏதேனும் மாறுதல் இருக்கிறதா என்று ஒன்றுக்கு இருமுறை கேட்பார்கள் ஆனால் என்னிடம் மூன்று மாதங்கள் வரை யாருமே எதையும் கேட்கவில்லை.டிசம்பர் 29 ஆம் தேதி தலைமைச் செயலாளருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். டிசம்பர் 30-ஆம் தேதி என்னை விடுவிக்கவேண்டாம் ஜனவரி 30 அல்லது அதற்கு முன்பு விடுவித்து விடுங்கள் இது தொடர்பாக உங்களை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் நேரம் ஒதுக்குங்கள் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால் பொதுத்துறை செயலாளர் என்னிடம் ஜனவரி 2ம் தேதியே உங்களை விடுவித்து விட்டோம். அதற்கான அரசாணை வந்துவிடும் என்றார் என்னை எப்போது விடுவிக்க வேண்டும் என்றே எனது கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன் அப்படி இருக்க விடு விடுத்துவிட்டோம் எனக் கூறுவது சரியில்லையே? என்றேன். அதற்கு அவர் அரசாணை வெளியிட்டாச்சே என்றார்.
3 மாத காலத்துக்குள் எனது விருப்ப ஓய்வு கோரிக்கையை ரத்து செய்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது அப்படி இருக்க, நான் குறிப்பிட்ட தேதியில் என்னை விடுவிக்க அரசுக்கு என்ன சங்கடம் என்று கேட்டேன். அதற்கு பதில் இல்லை. தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு ஜனவரி 4-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பினேன்.அவரிடம் இருந்து எந்தப் பதிலுமில்லை. இதையடுத்து அவருக்கு ஒரு ஈமெயில் அனுப்பினேன். ஏற்கனவே எனது நிலையை தெளிவுபடுத்தி இருக்கிறேன் உங்களை சந்திக்க நேரம் கேட்டும் நீங்கள் தரவில்லை என்றெல்லாம் விரிவாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் வழக்கம் போல் எந்த பதிலும் இல்லை. மாறாக நான் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு பணியிலிருந்து விலக தயக்கம் காட்டுவது போல ஊடகங்களில் செய்திகளை கசிய விட்டனர். சமூக வலைதளங்களிலும் அவதூறாகவே செய்தியைப் பரப்பினர்.30 ஆண்டு காலம் நேர்மையாகப் பணியாற்றிய எனக்கு அடிக்கடி டிரான்ஸ்பர், அதிகாரமற்ற பதவிகள் கொடுத்தபோது கூட மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன்.
ஓய்வு பெறும் போது கூட கண்ணியமான சூழ்நிலை இல்லை . நான் விரும்பும் தேதியில் ஓய்வு பெற கூட அவர்களுக்கு செய்ய மனமில்லை. ஏதோ பெரும் ஊழல் செய்த ஓர் அரசு ஊழியடை வீட்டுக்கு அனுப்புவது போல திட்டமிட்டு என்னை அலைக்கழித்தனர். அது கூட பரவாயில்லை தலைமைச் செயலகத்தில் என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள், நண்பர்கள் யாரிடமும் சொல்லாமல் விடைபெற்று விட்டோமே என்ற வருத்தம் எனக்கு இன்றளவும் உள்ளது. தமிழக அரசில் முழுமையான அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் பணியாற்றியதற்காக அரசும் தலைமைச் செயலரும் அளித்த பரிசாகவே இதை நான் கருதுகிறேன்.அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்னுடன் பயணித்த இளைஞர்கள் பலர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஊழல் எதிர்ப்புப் பணிகள், சமூக சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை விரைவில் செய்ய உள்ளேன்.சென்னை சட்டக் கல்லூரியில் 88ஆம் ஆண்டு சட்டம் பயின்ற பின்னர் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தேன். பின்னர் மத்திய அரசுப் பணிக்குத் தேர்வானேன். அரசுப் பணியில் சேர்ந்தால் பார் கவுன்சில் உள்ள பதிவை புதுப்பிக்கவில்லை. இனி அதை புதுப்பித்து வழக்கறிஞராக செயல்படவும் முடிவு செய்திருக்கிறேன். பொதுநல வழக்குகள், ஏழை எளிய மக்களுக்கான சட்ட உதவிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட திட்டமிட்டிருக்கிறேன்.
நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த போது அங்கு உள்ள உழவர் சந்தையில் உழவர்களைக் கொண்டே உழவர் உணவகம் ஒன்றை தூக்கினேன். ஒரே வருடத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தது. அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார் அவர் கூட்டிய கலெக்டர்கள் மாநாட்டில் இது பற்றி எடுத்துச் சொல்லி மற்ற மாவட்டங்களிலும் இதை தொடர வேண்டும் என்று சொன்னபோது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட கருணாநிதி அவர்தான் வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறாரே ஏன் மறுப்பு சொல்கிறீர்கள் மற்ற இடங்களிலும் நடத்துங்கள் என்று சொல்லி அனுமதி கொடுத்தார். இது ஒன்று தான் ஒரு நல்ல அனுபவம். மற்றபடி கருணாநிதி ஜெயலிதா இருவர் ஆட்சியிலும் அடிக்கடி டிரான்ஸ்பர்களுக்கு பஞ்சமேயில்லை.
அரசு பணியில் நேர்மையாக இருப்பவர்களுக்கு நேர்மையாக இருப்பவனுக்கு பணிக்காலம் முழுவதும் வருத்தமும் வலியும்தான் அதிகமாக இருக்கும் அந்த இரண்டும் எனக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் அந்த இரண்டும் எனக்கு வலிமையைத்தான் தந்திருக்கிறது. எனக்கு கிடைத்த முதல் பணியான கூடலூர் கோட்டாட்சியர் பணியின் போதும் இதே ஸ்டைலில்தான் விடுவிக்கப்பட்டேன். இவ்வளவுக்கு இடையூறுகளுக்கு மத்தியிலும், நான் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக இருந்தபோது தமிழ்நாடு அறிவியல் நகரத்தை அறிவியல் தொழில்நுட்பத்துறையாக மாற்ற வேண்டும் அப்படி மாற்றி ஏராளமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அளவில் அதிக ஐ.ஐ.டிகளை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் விரிவான ஒரு பரிந்துரையை அரசுக்கு அனுப்பி விட்டுத்தான் வெளியே வந்திருக்கிறேன்.
இப்போதைய இளைஞர்களுக்கு அரசு பணி மீதான நாட்டம் இன்னும் குறையவில்லை. அரசுப் பணியில் சேரும் இளைஞர்கள், எதற்கும் அஞ்சாமல் கடைசிவரை நேர்மையோடும் மன உறுதியோடும் செயல்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் நேர்மையாக இருந்தாலே போதும் நிர்வாகமும் நேர்மையாக இருக்கும். அது மட்டும் இருந்தால் ஊழல் என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடும். அதுதான் எனது திடமான நம்பிக்கை.