ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

by SAM ASIR, Feb 7, 2021, 15:45 PM IST

ஸ்மார்ட்போன்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன என்பதை முற்றிலுமாக யாராலும் மறுக்க இயலாது. ஸ்மார்ட்போன்கள் தேவையான தொடர்புக்கு பயன்படுகின்றனவா என்பதைக் காட்டிலும் அவை எவ்வளவாய் மற்ற பயன்பாட்டுக்காக விரும்பப்படுகின்றன என்ற கேள்வியும் பொதுவாக எழுகிறது. இன்றைய இளம் தலைமுறையினரை விட்டு பிரிக்க இயலாத சாதனமாக ஸ்மார்ட்போன் இடம் பிடித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக்காக பொது முடக்கம் நடைமுறையில் இருந்தநாள்களில் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, நண்பர்கள், உறவினர்களோடு வீடியோ அழைப்பு மூலம் பேசுவது, Zoom போன்ற செயலிகள் மூலமான சந்திப்புகள் என்று தகவல் தொடர்புக்காகவும்.

வீட்டிலிருந்தே பணிகளை செய்யவும் ஸ்மார்ட்போன்கள் உதவியதை மறுக்க இயலாது. அதே சமயம், ஸ்மார்ட்போனில் விளையாடக்கூடாது என்று பெற்றோர் கண்டித்ததற்காக, ஸ்மார்ட்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததற்காக என்று எத்தனையோ வளரிளம் பருவத்தினர் உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகளை தினம் பார்க்கிறோம்; கேட்கிறோம். இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து தனியார் நிறுவனம் ஒன்று கணக்கெடுப்பு செய்துள்ளது. அதன்படி 2019 டிசம்பர் மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியை (500 மில்லியன்) தாண்டியிருந்தது.

கேமிங்
உலக அளவில் ஸ்மார்ட்போனில் அதிக அளவில் கேம் விளையாடும் மக்கள் இருக்கும் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2018ம் ஆண்டில் இந்தியாவில் மொபைல் மூலம் கேம் விளையாடுவோர் எண்ணிக்கை 26 கோடியே 90 லட்சம் (289 மில்லியன் பேராக இருந்தது. அதாவது அந்த நாள்களில் யாரிடமெல்லாம் ஸ்மார்ட்போன் இருந்தததோ அத்தனைபேரும் கேம் விளையாடி இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் அகமதாபாத் நகரம் முதலிடத்தையும் நவி மும்பை மற்றும் வதோதாரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ள நகரங்களாகும். பாட்டில் ராயலே (Battle Royale)மற்றும் எம்ஓபிஏ (MOBA) ஆகியவை மிகவும் பிரபலமான வகைப்பாடுகளாகும்.

சமூக ஊடகங்கள்
2020 அக்டோபர் கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 39 கோடியே 70 லட்சம் பேர் (397 மில்லியன்) ஃ பேஸ்புக் பயனாளர்கள் இருந்தனர். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 27.1 சதவீதமாகும். 12 கோடியே 53 லட்சம் பேர் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது தெரிய வந்தது. உலக அளவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா, இரண்டாவது இடம் பெற்றுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடர்புகளுக்கான லிங்டுஇன்னுக்கு இந்தியாவில் 7 கோடியே 17 லட்சம் பயனர்கள் உள்ளனர். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.1 சதவீதமாகும். இந்தியாவில் நாம் ஒவ்வொருவரும் தினமும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சராசரியாக 2 மணி நேரம் 36 நிமிடம், ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்தை செலவு செய்கிறோம் என்று அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.

ஓடிடி தளங்கள்
உலக அளவில் ஓடிடி தளங்களை பார்க்கும் சராசரி நேரம் வாரத்திற்கு 6 மணி 48 நிமிடங்களாகும். ஆனால் இந்தியாவில் அந்த சராசரி வாரத்திற்கு 8 மணி 33 நிமிடங்களாக உள்ளது. 2 கோடியே 22 லட்சமாக இருந்த ஓடிடி சந்தாதாரரின் எண்ணிக்கை பொது முடக்கத்தின்போது 30 சதவீதம் உயர்ந்து 2 கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் பிரைம் வீடியோ பரவலாக பயன்படுத்தப்படுகிறது பெருநகரங்களில் ஓடிடி பயனர்களில் 65 சதவீதம் பேர் பிரைம் வீடியோ பார்க்கின்றனர். யூடியூப்பை பொறுத்தமட்டில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்படுபவை இந்தி வீடியோக்கள்தாம். அதாவது இந்தியாவில் பார்க்கப்படும் யூடியூப் வீடியோக்களில் 54 சதவீதம் இந்தி மொழி வீடியோக்கள்தாம்.

ஸ்டீரிமிங் தளங்களை பொறுத்தமட்டில் இந்தியாவில் பிரபலமாக இருக்கபது டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆகும். கடந்த ஆண்டு ஐபிஎல் நடந்தபோது ஒரே மாதத்தில் 1 கோடியே 30 லட்சம் பேர் டிஸ்னி+ஹாட்ஸ்டாரை நிறுவியுள்ளனர். தொடர்ந்து செல்போனை பயன்படுத்துவது தூக்கத்தை கெடுப்பதாகவும் அசதியுற செய்வதாகவும் கூறப்படுகிறது. படுக்கைக்குச் செல்லும் முன்பு செல்போனை பார்ப்பதால் தூக்கமின்மை பாதிப்பு ஏற்படும். செல்போன் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமையாவது வளரிளம் பருவத்தினரின் மனநலத்தை பாதிக்கிறது. செல்போன் அடிமைத்தனம் மனக்கலக்கம், மனச்சோர்வு மற்றும் கோபம் அடையும்படி அவர்களை தள்ளுகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆகவே, தேவைக்கு மட்டும் செல்போனை பயன்படுத்துவது நல்லது.

You'r reading ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை