இரண்டு நாடுகளுக்காக 57 ஆண்டு கால அயராத பணி ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலின் இன்றைய பரிதாபம்

by Nishanth, Feb 12, 2021, 13:03 PM IST

ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலுக்கு 'கிராண்ட் ஓல்டு லேடி' என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு. இந்த போர்க்கப்பலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இரு நாடுகளின் ராணுவத்திற்காக சேவை புரிந்தது தான். தற்போது இந்த போர்க்கப்பலின் நிலைமை பரிதாபகரமாகி விட்டது. இதை உடைக்கும் பணிகள் 40 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஐஎன்எஸ் விராட் கப்பலுக்கு முதலில் இருந்த பெயர் எச்எம்எஸ் ஹெர்மெஸ் என்பதாகும். 1959ம் ஆண்டு தான் இந்த போர்க்கப்பல் பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் பயன்பாட்டிற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டது. 25 வருட சேவைக்குப் பின் 1984ல் இந்தக் கப்பலுக்கு பிரிட்டிஷ் ராயல் கடற்படை ஓய்வு கொடுக்க தீர்மானித்தது. இது குறித்து அறிந்த இந்திய அரசு இந்த போர்க் கப்பலை வாங்குவதற்கு விரும்பியது.

அதற்கு பிரிட்டிஷ் ராயல் கடற்படையும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து சில பராமரிப்பு பணிகளுக்குப் பின்னர் கடந்த 1987ம் ஆண்டு இந்தக் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் விராட் என பெயர் சூட்டப்பட்டது. 226.5 மீட்டர் நீளமும், 48.78 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஐஎன்எஸ் விராட் கப்பலில் 26 போர் விமானங்களை நிறுத்தி வைக்கக் கூடிய வசதி உள்ளது. இதன் எடை 28,700 டன் ஆகும். 2,256 நாட்களில் 5,88, 288 மைல்கள் கடலில் பயணித்த இந்த போர்க்கப்பலுக்கு கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு வழங்கப்பட்டது. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்காக இந்த போர்க்கப்பல் 57 ஆண்டு காலம் சேவை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படையில் இருந்து இந்த கப்பலுக்கு ஓய்வு வழங்கப்பட்ட உடன் அந்தக் கப்பலை வாங்கி சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அருங்காட்சியமாக மாற்ற மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டது.

ஆந்திரப் பிரதேச அரசும் இந்த போர்க்கப்பலை வாங்க போட்டி போட்டது. இந்தக் கப்பலுக்கு ஆந்திர அரசு ₹ 300 கோடி விலை பேசியது. அதை பாரம்பரிய கப்பலாக பராமரிக்க ஆந்திர அரசு தீர்மானித்திருந்தது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீராம் குழுமம் ₹ 38.5 கோடிக்கு அந்தக் கப்பலை ஏலத்தில் எடுத்தது. பின்னர் இந்தக் கப்பலை உடைப்பதற்காக குஜராத்திலுள்ள அலங்க் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே என்வி டெக் என்ற மரைன் நிறுவனம் இந்தக் கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற விருப்பம் தெரிவித்தது. ₹ 100 கோடிக்கு கப்பலை வாங்க தயார் என்று ராம் குழுமத்திடம் என்வி டெக் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ₹ 100 கோடியை ஒரே தவணையில் தரவேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும் ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் முகேஷ் படேல் என்வி டெக் நிறுவனத்திடம் தெரிவித்தார். இதையடுத்து தடையில்லா சான்றிதழை பெற என்வி டெக் நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.

ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதனால் என்வி டெக் நிறுவனத்தாலும் இந்தக் கப்பலை அருங்காட்சியமாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கப்பலை உடைக்கும் பணிகள் தொடங்கின. இந்நிலையில் என்வி டெக் நிறுவனம் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு கோரியது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைக்கும் பணியை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் அதற்குள் 40 சதவீத உடைக்கும் பணிகள் முடிந்து விட்டன. இதனால் உடைந்த பாகங்களை மீண்டும் பொருத்துவதற்கு வாய்ப்பில்லை என்று ஸ்ரீராம் குழும தலைவர் முகேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். இதனால் அரை நூற்றாண்டுக்கு மேலாக இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்காக பெரும் சேவை புரிந்த இந்த ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலின் இன்றைய நிலை வாழ்வா, சாவா என தெரியாத பரிதாபகரமான நிலையில் உள்ளது.

You'r reading இரண்டு நாடுகளுக்காக 57 ஆண்டு கால அயராத பணி ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலின் இன்றைய பரிதாபம் Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை