சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது பப்ஜி (PUBG) கேமும் தடை செய்யப்பட்டது. பப்ஜி கேமுக்கு மிக அதிகமான பயனர்கள் இருந்து வந்த நிலையில் அதற்கு விதிக்கப்பட்ட தடை ஏமாற்றமாக அமைந்தது. தற்போது பப்ஜி: நியூ ஸ்டேட் என்ற கேம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இந்தியாவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தென் கொரிய நிறுவனமான கிராஃப்டன், பப்ஜி கேமின் உரிமைதாரராகும். அது சீன நிறுவனமான டென்சென்ட் கேம்ஸ் மூலமாக இந்தியாவில் கேமை அறிமுகம் செய்திருந்தது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டதும், இந்திய அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு கேமை மறுபடியும் அறிமுகம் செய்வதாக கிராஃப்டன் நிறுவனம் தெரிவித்தது.
பின்னர் இந்தியாவில் பப்ஜி மொபைல் நிறுவனத்தை நிறுவியது. அதற்கு பெருநிறுவன அடையாள எண்ணும் (CIN) பெறப்பட்டுள்ளது. இதன் பதிவு அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. இந்தியாவுக்கென பப்ஜி மொபைல் இந்தியா என்ற புதிய வடிவம் உருவாக்கப்பட்டது. இந்த கேமின் ஆண்ட்ராய்டு வடிவம் இந்தியாவுக்கு 2020 இறுதியிலும் ஐபோன் வடிவம் 2021 ஜனவரியிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிராஃப்டன் நிறுவனம் பப்ஜி கேம் இந்தியா அறிமுகத்தை குறித்து உறுதியாக எதுவும் கூறவில்லை. ஆகவே, பப்ஜி மொபைல் இந்தியா உடனடியாக வரும் என்ற எதிர்பார்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு தாமதித்துள்ள நிலையில் மீண்டும் பயனர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.