உங்கள் சந்திப்புகளை, வேலைகளை வரிசைப்படுத்தக் கூடிய உதவி, கூகுள் மேப்பில் பலவித பரிந்துரை, நீங்கள் மின்னஞ்சல் எழுதும்போது, வாக்கியங்களை முடிக்க உதவி என்று புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.
கூகுள், தினமும் கோடிக்கணக்கான தன் பயனாளர்களிடமிருந்து திரட்டும் தரவுகளே இந்த எல்லா தொழில்நுட்ப சிறப்பம்சங்களும் செயல்பட உதவுகின்றன. நாள்தோறும் 10 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் ஜிமெயில், ஆண்ட்ராய்டு இயங்குதளம், யூட்யூப், கூகுள் ட்ரைவ், கூகுள் மேப், கூகுள் தேடுதல் உள்ளிட்ட ஏழு தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு தயாரிப்பையும் 10 கோடி பேர் பயன்படுத்தினால், எவ்வளவு தரவுகள், தகவல்கள் கூகுள் வசம் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
டைலன் க்யூரன் என்ற தகவல் தொழில்நுட்ப ஆலோசகர், சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி இருக்கும் தகவல்களை பதிவிறக்கம் செய்து பார்த்தாராம். ஃபேஸ்புக்கில் அவரைப் பற்றிய தகவல்கள் 600 மெகாபைட் அளவு இருந்தன. கூகுளிலோ 5.5 ஜிகாபைட் அளவு இருந்தன. ஒப்புநோக்க 9 மடங்கு அதிகம்!
"அரசாங்கமோ அல்லது நகராட்சியோ நம் வீடுகளுக்குள் காமிரா அல்லது மைக்ரோபோனை வைப்பதற்கு சம்மதிப்போமோ? மாட்டோம். ஆனால், ஏதோ சில வீடியோக்களை பார்ப்பதற்காக நம்முடைய தனிப்பட்ட தகவல்களை நாமே முன்வந்து கொடுத்துவிடுகிறோம். இந்த நவீன யுகத்தில் என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம் இது." என்கிறார் டைலன்.
ஃபேஸ்புக்கை பற்றிய கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா சர்ச்சை வெளிப்படும் வரைக்கும், அது குறித்து நமக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. நாம் எங்கு செல்கிறோம், நம்முடைய தனிப்பட்ட விருப்பங்கள் என்ன, எவற்றை பார்க்கிறோம், மின்னஞ்சலில் என்ன எழுதுகிறோம் என்பதை நாமே பகிர்ந்து கொடுக்கிறோம்.
ஆனால் கூகுளோ, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் விற்பதில்லை. 18 மாதங்களுக்குப் பின்னர் தகவல்கள் இன்னாருடையவை என்ற அடையாளத்தை இழந்துவிடும். பயனர் விரும்பினால், அவரைப்பற்றிய அனைத்து விவரங்களைம் அழித்துவிடக்கூடிய வசதி உள்ளது. உரிய விளம்பரங்களை அனுப்புவதற்காக நாங்கள் பயனரின் செயல்பாடுகளை கவனிப்பதற்கு பல்வேறு எல்லைகள் உண்டு என்று அறிவித்துள்ளது.
ஆயிரம் அல்ல; பல்லாயிரம் ஜோடி கண்கள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்த நவீன யுகத்தில் அதற்கு நாமே வழிசெய்து கொடுக்கிறோம் என்பதே உண்மை!
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com