உலகின் மிக விலை உயர்ந்த காலணியை துபாயின் ஜாடா துபாய் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காலணியின் விலை 17 மில்லியன் அமெரிக்க டாலர்களாம். இந்திய மதிப்பில் சுமார் 123 கோடி ரூபாய்.
சுத்த தங்கத்தினால் ஆன இந்த ஷூவை சுற்றி பிரத்யேக வைரங்களை பதித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட டி-ஃப்ளாலஸ் 15 காரட் வைரங்கள் பதித்த இந்த ஷூவை ஜாடா துபாய் நிறுவனம் 9 மாதங்கள் கடின உழைப்பை கொட்டி உருவாக்கியுள்ளதாக அதன் நிறுவனர் தெரிவித்தார்.
பேஷன் ஜுவல்லர்ஸ் நகைக்கடையுடன் இணைந்து ஜாடா துபாய் நிறுவனம் உருவாக்கிய உலகின் அதி விலையுயர்ந்த காலணியை உலகின் மிகப்பெரிய 7 நட்சத்திர ஹோட்டலான புர்ஜ் அல்-அரபில், இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் டெபி வின்கம் என்பவர் பயன்படுத்திய ஹை-ஹீல்ஸ் தான் உலகின் விலையுயர்ந்த காலணியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன் விலை 15.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஜாடா துபாய் நிறுவனம், இந்த காலணியை பிரத்யேகம் மற்றும் தனித்துவமான ஒன்றாக உருவாக்க ஆசைப்படுகிறது. இந்த காலணியை விலை கொடுத்தும் வாங்கும் நபரின் கால்களின் அளவுக் கேற்ப இதனை மாற்றி கொடுக்கவும், உலகின் ஒரே விலையுயர்ந்த காலணியாகவும் இது திகழ வேண்டும் என்பது தான் தனது குறிக்கோள் என இந்த காலணியை உருவாக்கிய கலைஞர் மரியா மஜாரி தெரிவித்துள்ளார். மேலும், தனித்துவமான இந்த ஷூ, பெண்களுக்கான ஒன்றாக வடிவமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகின் ஒன் அண்ட் ஒன்லி காஸ்ட்லியான இந்த வைரம் பதித்த தங்க ஷூவை வாங்கப்போகும் அந்த அதிர்ஷ்ட மங்கை யார் என்பது விரைவில் தெரியவரும்..