தீபாவளி நெருங்கி வருவதால், புத்தாடை வாங்குவதற்காக மக்கள் தி.நகரில் குவிந்து வருகின்றனர். இதனால், தி.நகர் பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரமும் தானே.. காலையில் எழுந்து எண்ªணை வைத்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தால் தான் தீபாவளி முழுமையடையும்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே புத்தாடைகளை வாங்க தொடங்கிவிட்டனர். ஒரு சிலர் அலுவலகங்களிலிருந்து போனஸ் வழங்கப்பட்ட பிறகு தங்களது ஷாப்பிங்கை தொடங்கி உள்ளனர்.
இதனால், தீபாவளி நெருங்க நெருங்க ஷாப்பிங்கிற்காக குவியும் மக்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னை உள்பட வெளிமாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாடைகள் வாங்க தி.நகருக்கு தான் படையெடுப்பார்கள். இதற்கு, தங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் வாங்கக்கூடிய பொருட்கள், புத்தாடைகள் இங்கு கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், புத்தாடைகளை வாங்க கடைசி நேரத்தில் குவியும் மக்களால் தி.நகர் ஸ்தம்பித்து உள்ளது. தீபாவளிக்கு முன்பு வரும் வார இறுதி நாள் என்பதால், நேற்றும், இன்றும் தி.நகர் பகுதியில் மக்கள் வெள்ளம் அலைமோதி வருகிறது. இதனால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு அம்சங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை வரை இந்த கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.