அடுத்த தீபாவளியாவது..
பெட்ரோல், சிலிண்டர்
விலைவாசி விண்ணை முட்டும்
ஏழை, நடுத்தர வர்க்கத்துக்கு
அதனாலே
சங்கு சக்கரமாய்
தலை சுற்றி
இருட்டு கட்டும்!
அரிசி விலை, மளிகை விலை
ராக்கெட் வெடியாய்
உயரப் பறக்கும்..
அதனாலே ஏழைக்கெல்லாம்
தீபாவளியன்றும்
துயரக் கிறக்கம்!
நகைக் கடை, துணிக்கடைகள்
பங்களாவாசி முற்றுகையால்
திணறி நசுங்கிப் போகும்...
ஏழைக்கு
கறிச் சோறு கனவும்
காசில்லாத்தால்
பாம்பு வெடியாய்ப்
பொசுங்கிப் போகும்!
பண்டிகை என்றாலே
ரொக்கம் உள்ளோர்க்கும்
மகிழ்ச்சி வாசலும் திறக்கும்..
ஆனால், ஏழைமேணியின்
புதுத்துணி ஆசையும்
நொடிப் பொழுதே வாழும்
ஈசலாய் இறக்கும்!
ஏழைக்குத் தீபாவளி
பொருளாதார இயலாமையாம்
புஸ்வானமாய் பிசுபிசுக்கும்
எப்போதும் இப்படியாய்-வாழ்வு
இனிப்பின்றியே கசக்கும்!
நூலிழை மீது ஓடும்
ஏழை வாழ்வு
ரயில் வெடிதான்..
தீபாவளி கொண்டாடத்
திராணியில்லை..
தினம் தினம் வலிக்கிற
தேளின் கடிதான்!
உரக்கச் சத்தமிடப்
பயப்படும்
ஓலை வெடிதான்
ஏழை வாழ்வு..
தன் பலம் அறியாது
பயந்து கிடப்பதால்
பஞ்சமே நிலைத்துப்போன
பாழ்பட்டக் குடிதான்!
தலையில் தட்டினாலும்
வெடிக்காமல் நமத்துப்போன
பொட்டுப் பட்டாசாம்
ஏழையரின்
குட்டக் குனிகிற சுபாவத்தால்
அடிமையாக்கினார்
மிட்டா மிராசுதான்!
நெருப்புப் பொறி உதிர்க்கும்
கம்பி மத்தாப்புதான்?- நெல்
அறுப்பு பொய்த்ததாலே
உதிரும் உழவன்
உயிர் பூ தான்!
தடுத்த பயத்தால்
புஸ்வான வாழ்வு மீண்டு புத்தெழுச்சி பெறுவோமே- ஏழை
அடுத்தடுத்த தீபாவளியேனும்
சரவெடிச் சந்தோஷம் காண
சபதம் ஏற்போமே!
-அல்லிநகரம் தாமோதரன்