தூத்துக்குடி ஆதிச்சநல்லூரிலிருந்து சிரியாவுக்கு சென்ற தொழில்நுட்பம்!

Ancient Tamil Nadu Made the Finest Steel In The World

by SAM ASIR, Nov 10, 2018, 19:29 PM IST

பழங்கால உலகின் ஆச்சரியங்களுள் ஒன்று டமாஸ்கஸ் ஸ்டீல் என்னும் ஊட்ஸ் எஃகு. 'ஊட்ஸ்' என்ற பதம், தமிழின் 'உருக்கு' என்ற சொல்லிலிருந்து பிறந்தது. இந்த உலோக கலவையானது உலோகவியலில் இன்றும் குறிப்பிடத்தக்க, சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

உலக பிரசித்தி பெற்ற 'டமாஸ்கஸ் வாள்' இந்த எஃகினால்தான் செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து பெறப்பட்ட எஃகிலிருந்துதான் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. 'டமாஸ்கஸ்' எனப்படும் தமஸ்கு, சிரியா நாட்டின் தலைநகரமாகும். புரதான நகரமாகிய இது, முற்காலத்தில் பெரிய வர்த்தக நகரமாக விளங்கியது. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட எஃகிலிருந்து இந்த நகரத்தில் போர்க்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சேர மன்னர் காலம்

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சேரர்கள் ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட இந்த உலோக கலவை பின்னர் உலகெங்கும் பரவியுள்ளது. இரும்பை சூடாக்கி, அடித்து, நுண்துளைகளுண்டாக்கி, எஃகு தயாரிக்கும் முறை தமிழர்களால் உருவாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மரத்துண்டுகளும், உலோகமும் களிமண் கலன்களுக்குள் வைக்கப்பட்டு அதிக வெப்பத்திற்குள்ளாக்கப்படுகின்றன. வெப்பத்தினால் மரத்துண்டுகள், கார்பன் என்னும் கரியாக மாறுகின்றன. அது இரும்புடன் இணைந்து எஃகு உருவாகிறது. துல்லியமான முறை காலத்தாற் மறைந்து போயிருந்தும், இந்த முறையில்தான் உருவாக்கியிருக்கக்கூடும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. கூறப்பட்டதைக் காட்டிலும் நுட்பமான வழிமுறைகள் கையாளப்பட்டிருக்கலாம்.

பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பாட்டுக் கல்வி கழகத்தைச் (National Institute of Advanced Studies - NIAS) சேர்ந்த பேராசிரியை சாரதா ஸ்ரீனிவாசன் பதிப்பித்த ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு ஆய்வறிக்கைகள் மூலமாக மேற்கூறப்பட்ட செய்முறையை சற்றேறக்குறைய நிரூபிக்க முடிகிறது.

தமிழ்நாடு செய்முறை

ஊட்ஸ் எஃகினை ஆய்வு செய்த பேராசிரியை, உலோகவியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் இந்த ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்டு தற்போது சென்னையில் அரசு அருங்காட்சியகத்தில் இருக்கும் பழங்கால உலோக கருவிகளையும் சாரதா ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்துள்ளார்.

இக்கருவிகளை மின்னணு நுண்ணோக்கி கொண்டு ஆய்வு செய்ததில் உயர்தர உலோகவியல் முறையில் காணப்படும் நுண்துளைகள் இவற்றில் இருப்பதை கண்டறிந்தார். இதன் மூலம் இந்த உலோக கலவையை உருவாக்கும் முறையை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதுடன் முயன்று கற்றல் என்ற முறையின் மூலம் ஆழமான அறிவு கொண்டிருந்தனர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இரும்புடன் கரி சேர்ந்து உலோக கலவை பெறப்படுகிறது என்ற செயல்முறை இருந்திருக்கும் என்று கருதப்பட்டாலும், அதற்கான ஆதாரம் கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது இந்த உயர்தர முறையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது நிரூபணமாகியுள்ளது. மரம் போன்று எனிதில் எரிந்து கரியாக மாறக்கூடிய பொருள்களை இரும்புடன் சேர்த்து நீண்ட நேரம் 1,400 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்குள்ளாக்கும்போது இந்த உயர்தர எஃகு கிடைக்கிறது என்று பேராசிரியை குறிப்பிட்டுள்ளார். இது 'தமிழ்நாடு செய்முறை' என்றே அவரது ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெண்கலம் என்னும் உலோக கலவை

பேராசிரியை சாரதா ஸ்ரீனிவாசன், முன்னர் தாமிரம் மற்றம் வெள்ளீயத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் உலோக கலவையான வெண்கலத்தை குறித்த ஆய்வறிக்கை ஒன்றை பதிப்பித்தார். ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு கிடைத்த வெண்கலத்தில் 23 விழுக்காடு வெள்ளீயம் கலந்திருந்தது. இது வெண்கலத்திற்கு அதிக நீட்சியடையும் தன்மையை கொடுத்ததோடு, அதிக வெப்பத்திற்கு உட்படுத்தப்படும்போது அதிக ஒலியெழும்பும் திறனையும், கம்பியாக நீட்டப்படும் திறனையும் பெறும்.

விழுப்புரம் மாவட்டம் மேல்சிறுவலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலைக்கலன்களின் துண்டுகள், கரி சேர்ந்த உயர்தர எஃகினால் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றால் ஆன உலைகலன்கள் மிகுந்த வெப்பத்தை தாங்கக்கூடியவை. அந்த உலைக்கலன்களை குறித்து தொடர்ந்த செய்யப்பட்ட ஆய்வின் மூலம், 'தமிழ்நாடு செய்முறை' என்பதை பேராசிரியை கண்டுபிடித்துள்ளார்.

You'r reading தூத்துக்குடி ஆதிச்சநல்லூரிலிருந்து சிரியாவுக்கு சென்ற தொழில்நுட்பம்! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை