மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் வென்று புதிய சாதனை படைத்தது இந்தியா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடந்தது. முதல் இரு ஆட்டங்களிலும் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் கடைசிப் போட்டி இரு அணிகளுக்கும் சவாலாகவே இருந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. யுகேந்திர சகாலின் மாயாஜால சுழலில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 230 ரன்களுக்கு சுருண்டது. சகால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதித்தார். சமி, புவனேஷ்வர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
231 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணியும் ஆமை வேகத்திலேயே ரன் சேர்த்தது. ரோஹித் சர்மா (9), தவான் (23) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கோஹ்லியும், தோனியும் நிதான ஆட்டத்தை வெளிப் படுத்தினர். தோனி வழக்கம் போல ஆரம்ப கட்டத்தில் பந்துகளை வீணடித்தார். கோஹ்லியும் 46 ரன்களில் அவுட்டாக தோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார்.
இருவரும் விக்கெட் விழாமல் மெதுவாக ரன் சேர்க்க ஒரு கட்டத்தில் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. கடைசி 4 ஓவர்களில் 33 ரன்கள் என்ற பரபரப்பான கட்டத்தில் கேதர் ஜாதவ் அதிரடி காட்ட ஒரு வழியாக இந்தியா 49.2 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 114 பந்துகளில் 87 ரன்களும், கேதர் ஜாதவ் அபாரமாக ஆடி 57 பந்துகளில் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மெல்போர்ன் வெற்றி மூலம் 3 நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று ஆஸி. மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது இந்தியா. இதே சுற்றுப் பயணத்தில் தான் டெஸ்ட் தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக இந்திய அணி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மெல்போர்ன் போட்டியில் சுழல் மாயாஜாலத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சகால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த இரு போட்டிகளிலும் இக்கட்டான நேரத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.