இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. இவருக்கு இந்தியா முழுவதும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் தமிழகத்தில் இவருக்கு நிறைய ஃபேன் பாலோயர்ஸ் உண்டு. இருப்பினும் சமீபகாலமாக இந்திய அணியில் இடம் பிடிப்பதில் தடுமாறி வருகிறார். பார்ம் இல்லாதது, நிறைய இளம் வீரர்களின் வருகை உள்ளிட்டவைகளால் ரெய்னா தடுமாறி வருகிறார். இதனால் இங்கிலாந்து உலகக்கோப்பையில் இவர் பங்கேற்பது கடினம் தான்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரெய்னா கார் விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த வதந்தி அவரின் குடும்பத்தார் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது குடும்ப நண்பர்கள் இது குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதனால் இந்த வதந்தி குறித்து தற்போது ரெய்னா பேசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ``கடந்த சில நாட்களாக நான் கார் விபத்தில் இறந்துவிட்டதாக போலியான செய்தி வந்த வண்ணம் உள்ளது. இது என்னைக் காயப்படுத்தியுள்ளது மட்டுமில்லாமல் எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.
இதுபோன்ற செய்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். கடவுள் அருளோடு நான் நன்றாக பாதுகாப்பாக உயிரோடு இருக்கிறேன். என்னைப் பற்றி யூ டியூப்பில் வெளியாகியுள்ள தவறான காட்சிகளை நீக்குமாறு புகார் அளித்துள்ளேன். இதுதொடர்பாக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.