ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றி உள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வென்றிருந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்திருந்தது. இதில், அதிகப்பட்டமாக ஜோஸ் பட்லர் கடைசிவரை அவுட்டாகாமல் 83 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். 50 ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் குவித்து அவர் சதத்தை நிறைவு செய்தார். கிறிஸ் வோக்ஸ் 53 ரன்களும், இயன் மோர்கன் 41 ரன்களும் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் மட்டும் குவித்தது. ஆரோன் பிஞ்ச் 62 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 55 ரன்களும் எடுத்தனர்.
இதனால், 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்திருந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் பழிக்கு பழி வாங்கியுள்ளது.