கடந்த ஆண்டு, தோனியின் பேட்டிங்கிற்கும் தற்போதைய ஆட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. 2018-ல் 20 போட்டிகளில் விளையாடி 275 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரால் முன்புபோல ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் பதிலடி கொடுத்தார் தோனி.
இந்த இரு தொடர்களிலும் சிறப்பாக விளையாடி இந்த ஆண்டை அட்டகாசமாகத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், இவர் அடுத்தடுத்து மூன்று அரை சதங்களை விளாசினார். அந்தத் தொடரில், தொடர் நாயகன் விருதையும் அவர் பெற்றார். உலகக்கோப்பை போட்டிக்கு முன் இன்னும் நல்ல பார்மில் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகக்கோப்பையில் தோனியின் அனுபவத்தை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் தோனி கணிசமான ரன்கள் அடித்ததோடு தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். மேலும் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்துகிறார். குறிப்பாக இளம் பந்து வீச்சாளர்களுக்கு தோனியின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கிறது. அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களை அவர் பார்த்துள்ளார். பல உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் இறுதிப் போட்டிகளில் அதிக அளவில் விளையாடி பெருமை அவருக்கு இருக்கிறது. இப்படி இருக்கும்போது உலகக்கோப்பை தொடருக்கு அவர் ஏன் செல்லக்கூடாது.
இத்தனை தகுதிகள் போதாதா உலகக்கோப்பை போட்டியில் அவர் விளையாடுவதுக்கு. இப்போது நல்ல பார்மில் இருக்கும் அவர் சிறப்பாக ரன்கள் குவித்து வருகிறார். இதனால் உலகக்கோப்பையில் தோனி நான்காவது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றார்.