ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து இந்தத்தொடரில் 4-ம் தரவரிசை பெற்றிருந்தார். இந்தப் போட்டியில் தரவரிசையில் முதல் 32 இடங்களை பிடித்துள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற முதல் சுற்றில் பி.வி. சிந்து தென்கொரியாவின் சுங் ஜி ஹியுன்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் ரவுண்டில் 21-16 என்ற கணக்கில் சிந்து தடுமாறினார். அடுத்த சுற்றில் 20-22 என்ற கணக்கில் தனது திறமையை காட்டினார். இருப்பினும் மூன்றாவது சுற்றில் 21-18 என்ற கணக்கில் சுங் ஜி ஹியுன் சேட்டை கைப்பற்றினார்.
இதனால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார் பி.வி. சிந்து. இதனால் முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறுகிறார். சிந்து வெளியேறினாலும் இந்தியா சார்பில் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தொடரில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ரூ.49 லட்சம் பரித்தொகை வழங்கப்படவுள்ளது. மேலும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.52 லட்சம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.