இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 313 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது .பின்னர் களமிறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் கேப்டன் மட்டும் தனி ஆளாகச் சிறப்பாக விளையாடி 123 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இப்போட்டியின் மூலம் கோலி தனது 41-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் 48.2 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடித்து 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். இதனால் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. எனினும் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது .
இதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கோலி "இனி வரும் போட்டிகளில் நிறைய மாற்றங்கள் இருக்கும் எனவும் இந்தியா அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். மேலும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். உலகக்கோப்பைத் தொடர் விரைவில் வரவுள்ளது. மிடில் ஆர்டரில் சில தேக்கங்கள் இருந்தாலும் நாங்கள் மீண்டும் வலிமையாக வருவோம்” என்றார்.
இதன் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் ஒரு சில மாற்றங்கள் உள்ளது எனத் தெரிகிறது. அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கார் கூறுகையில், ``அடுத்த போட்டியில் தோனிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் விளையாடுவார். ரிஷப் பன்ட் சேர்க்கப்படுவது அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டிக்கு அடித்தளமாகவும் ,அனுபவமாகவும் அவருக்கு அமையும் என்ற காரணம் கருதியே. காயங்கள் சரியாகாத நிலையில் ஷமி உள்ளதால் அவருக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறக்கப்படுவார்" என்றார். இதனால் அடுத்த போட்டிகளில் தோனி விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.