நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா.
ஆம், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அரை சதம், இரண்டு சதங்களுடன் 383 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. முதல் இரண்டு போட்டிகளில் முக்கிய வீரர்கள் விரைவாக அவுட் ஆக கவாஜா சிறப்பாக விளையாடி அணியை மோசமான தோல்வியிலிருந்து தப்பிக்க வைத்தார். இதே தான் அடுத்தடுத்த ஆட்டங்களிலும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து நிலையான சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கவாஜா முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் உலகக் கோப்பைக்கான தனது கனவு ஆஸ்திரேலிய அணி பட்டியலை வெளியிட்டார் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே.
இதில் கவாஜா பெயர் இடம்பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் தற்போதுள்ள ஆஸ்திரேலிய வீரர்களில் உஸ்மான் கவாஜா மட்டுமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அது உள்ளூர் மண்ணாலும் சரி, வெளியூர் ஆட்டங்களாக இருந்தாலும் சரி. அப்படி இருக்கையில் வார்னே அணித் தேர்வு தவறு என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில் இந்திய தொடர் மூலம் வார்னேவுக்கு தனது பேட்டிங் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார் கவாஜா என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.