ஐ.பி.எல் தொடரின் 15வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை அணி சூரியகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடி உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் தாகூர் தவிர பந்துவீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரில் ராயுடு ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் பெரேன்டர்ப் வீசிய பந்தில் வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த் ரெய்னா சிறிது நேரமே தாக்குப்பிடித்தார். ரெய்னா 16 ரன்கள் எடுத்திருந்தபோது பெரேன்டர்ப் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை அற்புதமாக கேட்ச் பிடித்து வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார் கீரன் பொல்லார்ட். அவருக்கு முன்னதாகவே, வாட்சன் 5 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் கேதர் ஜாதவ் மட்டுமே சென்னை அணிக்கு கைகொடுத்தார்.
மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர். கேதர் ஜாதவ் 58 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் மலிங்கா ஆகியோர் வேக கூட்டணி அமைத்து மும்பை அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளது ஐபிஎல் அரங்கில் அந்த அணி பெறும் 100வது வெற்றியாகும்.