ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணிக்கு ஷேன் வாட்சன் மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோர் ஒப்பனர்களாக களம் புகுந்தனர். இரண்டு ஓவர் வரை மட்டுமே நீட்டித்தது இந்த பாட்னர்ஷிப். அடுத்தடுத்து வாட்சன், கேதர் ஜாதவ் அவுட் ஆக 4.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் என்று சென்னை அணி தடுமாறியது. இருப்பினும் அதன்பின் வந்த கேப்டன் தோனி - ரெய்னா இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரெய்னா 36 ரன்களுடன் வெளியேறினார். இதன்பின் கடைசி கட்டத்தில் தோனி அதிரடி காட்டினார். குறிப்பாக கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். அவரின் அதிரடி உதவியுடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார்.
176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் அதிர்ச்சி கொடுத்து வெளியேறினார் கேப்டன் ரஹானே. அவரை போல பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணியும் தடுமாறியது. இருப்பினும் அடுத்து வந்த திரிபாதி - ஸ்டீவ் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடியது. திரிபாதி 39 ரன்களும், ஸ்மித் 28 ரன்களும் எடுத்து அவுட் ஆக அணி ஆட்டம் கண்டது. ஆனால் கடைசி நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடினார். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அவர் விளாச கடைசி ஓவர் வரை பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்துவீச வந்தார். தனது முதல்பத்திலேயே ஸ்டோக்ஸை கேட்ச் மூலம் அவர் வெளியேற்றினார். பின்னர் 5வது பந்தில் ஸ்ரேயாஸ் கோபாலையும் வெளியேற்றினார். இதன்மூலம் சென்னை அணி வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென்னை அணி இந்த தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி அபாயகரமான ஸ்டோக்ஸ், கோபால் ஆகியோரை வெளியேற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்தார் பிராவோ.
சென்னையில் நடந்த முதல் ஐபிஎல் போட்டி ரசிகர்களுக்கு பரபரப்பாக அமையவில்லை. விக்கெட் விரைவாக விழுந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர். ஆனால் இன்றைய போட்டியில் தோனியின் அதிரடி மற்றும் கடைசி ஓவர் வரை ஆட்டம் திரில்லாக சென்றதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.