ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் - டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. பெங்களூரு மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐய்யர் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்த பெங்களூரு அணி இந்த முறை சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் புதிய நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆனால் இந்த முறையும் அந்த நம்பிக்கை வீணானது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் இறங்கினர்.
இந்த ஜோடி நீண்டநேரம் நிலைக்கவில்லை. 2வது ஓவரின் கடைசிப் பந்திலேயே பார்த்திவ் படேல் 9 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் (17), மார்கஸ் ஸ்டோயினிஸ் (15) ஆகியோர் விரைவில் வெளியேற அணி தடுமாறியது. இருப்பினும் மொயின் அலியுடன் சேர்ந்து விரைவாக ரன்கள் சேர்த்தார் கோலி. இதன்பயனாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. கோலி அதிக பட்சமாக 41 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் களமிறங்கிய டெல்லி அணிக்கு தவான் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்தார். முதல் ஓவரில் அவர் அவுட் ஆக, ப்ரித்வி ஷாவுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோத்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், பவன் நெகி ஓவரில் ப்ரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். முதலில் மெதுவாக விளையாடிய ஷ்ரேயாஸ் 10 ஓவர்களுக்கு மேல் அதிரடி காட்டினார். அவருக்கு கொலின் இங்ரம் ஆகியோர் ஓரளவுக்கு கைகொடுத்தார். ஷ்ரேயாஸ், 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில், அந்த அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு சீசனில் பெங்களூரு அணி தனது 6-வது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது.