ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்த அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்ததில்லை. நடப்பு தொடரிலாவது அந்த சோகத்தை முறியடித்து கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பு என்பது மங்கதொடங்கிவிட்டது. இதுவரை அந்த 6 போட்டிகளில் விளையாடிவிட்டது. இந்த ஆறிலும் தோல்வி தான். இதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தோல்விகளுக்கு வீரர்களில் பார்ம் இல்லாதது, சொதப்பல் பீல்டிங், எதிரணிகளின் பலம் என்பதை தாண்டி ஒரு காரியம் உள்ளது. அது விராட் கோலியின் கேப்டன் ஷிப். சரியான நேரத்தில் அவர் எடுக்கும் தவறான முடிவுகளே தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களை மாற்றுவது, வீரர்களை ஊக்கப்படுத்த மறுப்பது, கோபப்படுவது என அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூரு அணியின் தொடர் தோல்வி குறித்து பேசிய அவர், ``பேட்டிங்கில் விராட் கோலி ஒரு மாஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரம் கேப்டன் பொறுப்பில் இன்னும் அவர் ஒரு அப்ரன்டிஸ் தான். அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. ஒவ்வொரு முறையில் பந்துவீச்சாளர்கள் மீது பழியை போட்டு அவர்களை திட்டுவதை விட தோல்விக்கு அவர் தான் காரணம் எனப் புரிந்துகொண்டு அதற்கான பொறுப்பை அவர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவரை ஒரு புத்திசாலி கேப்டன் என்று நான் கருதவில்லை. அவரை ஒரு தந்திரமான கேப்டனாக நான் பார்க்கவில்லை. அவர் ஐபிஎல் கோப்பையையும் வென்றதில்லை. ஒரு கேப்டன் என்பவரை அவரது சாதனைகள் தான் சொல்ல வேண்டும். ஆர்சிபி அணிக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக கேப்டனாக இருப்பது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஏனென்றால் எந்த ஒரு கேப்டன் கோப்பையை வெல்லாமல் இவ்வளவு காலம் கேப்டனாக இருக்க முடியாது. கோலி ஆர்சிபி அணியுடன் ஒட்டிக்கொண்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கும்போதே ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் ஆகியோரால் விளையாட முடியாது என அவர்களுக்கு தெரியும். அப்படி இருந்தும் அவர்களை ஏலத்தில் எடுத்தது ஏன் எனத் தெரியவில்லை. இப்படி பல தவறுகளை அவர் செய்துள்ளார்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.