ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
33வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி இல்லாமல் களமிறங்கியது. நேற்றைய போட்டியில் கேப்டனாக பொறுப்பு வகித்த சுரேஷ் ரெய்னா, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி படு தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக மாறியது.
கேப்டன் தோனி டாஸ் வென்றால் பந்துவீச்சையே பெரும்பாலும் தேர்வு செய்வார். இலக்கை அறிந்து கொண்டு அதை நோக்கி சென்னை அணியை வெற்றி பெற அழைத்துச் செல்வார்.
கடந்த இரு போட்டிகளில் ஏற்பட்ட முதுகு வலி காரணமாக நேற்றைய போட்டியில் தோனி பங்கேற்கவில்லை. தசை பிடிப்பால், தோனி கொல்கத்தா அணியுடன் விளையாடிய போட்டியில் அவதிபட்டதை அனைவரும் பார்த்தனர்.
ஆனாலும், முயற்சியை கைவிடாமல் விளையாடி அரைசதம் விளாசினார். மேலும், உலக கோப்பைக்கான அணியில் ரிஷப் பன்ட் இடம்பெறாமல், தோனியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளனர்.
அதனால், முக்கிய ஐபிஎல் போட்டிகளில் மட்டும் உலகக்கோப்பைக்கு தேர்வான வீரர்கள் விளையாடவேண்டும் என ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.
அதன் காரணமாகத்தான் நேற்றைய போட்டியில் தோனி ஓய்வெடுத்துக் கொண்டார்.
புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து சென்னை முதலிடம் பிடித்து வருகிறது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் வென்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பதால், தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 132 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 16.5 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்கள் விளாசி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் தோனி விளையாடததே அணியின் தோல்விக்கு காரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.