ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் ஓடி தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமங்கை கோமதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிவிப்பு என்னவென்றால்,
”கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி. இவர் சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாக பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும், அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தங்கமங்கை கோமதிக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சம் ரூபாய் காசோலையை முதல் ஆளாக வந்து தங்கமங்கை கோமதிக்கு அளித்த நிலையில், பலரும் கோமதிக்கு பாராட்டுக்களையும் ஊக்க பரிசுகளையும் வழங்க முன் வந்துள்ளனர்.
தமிழக அரசு தனக்கு உரிய ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி அளித்தால், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்று காட்டுவேன் என கோமதி மாரிமுத்து உருக்கத்துடன் பேட்டியளித்துள்ளார்.