காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் பனி மழையும், துப்பாக்கி குண்டுகளின் மழையும் பொழிவதாகவே கேட்டிருப்போம். ஆனால், இன்று காஷ்மீரால் இந்தியாவே பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தின் லே லடாக் பகுதியைச் சேர்ந்த 25 பெண்கள் இணைந்து தங்களது அயராத முயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று இந்தியாவின் முதல் பெண்கள் ஐஸ் ஹாக்கி அணியை உருவாக்கியுள்ளனர். 15 வயது முதல் 35 வயது வரையிலானப் பெண்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரையில் இரண்டு சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய பெண்கள் ஐஸ் ஹாக்கி அணிக்கு உலகளாவிய அங்கீகாரமும் தற்போது கிடைத்துள்ளது. பல சுற்றுகளில் இந்திய அணி வென்றாலும் இறுதிகோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால், விரைவில் சர்வதேச சாம்பியன் கோப்பையை வெல்வதே தங்கள் லட்சியம் எனக் கொண்டு இப்பெண்கள் களம் கண்டு வருகின்றனர்.
விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் எல்லா பெண்களைப் போலவும் இப்பெண்களுக்கும் அடிப்பட பிரச்னைகள் இருக்கத்தான் செய்தன. குடும்பங்களின் அழுத்தம், பொருளாதார நெருக்கடி, கடும் உழைப்பு, சர்வதேசப் பயணங்கள் எனப் பல இடர்களைக் கடந்தே இன்று இப்பெண்கள் அணி வளர்ந்து நிற்கிறது.
இந்திய ஐஸ் ஹாக்கி பெண்கள் அணிக்கு கனடாவைச் சேர்ந்த நான்கு முறை ஐஸ் ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்ற ஹேலி மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரும் பயிற்சியாளர்களாக உள்ளனர்.
இந்த ஐஸ் கேர்ள்ஸ் குறித்த ஆவணப்படம் ஒன்றும் இப்பெண்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் உருவாகி வருகிறது. கலக்குங்க கேர்ள்ஸ்!