கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார் ஆண்ட்ரு ரஸ்ஸல். இந்த சீசனில் அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டுசென்றது. நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவமே ஆடி தீர்த்துவிட்டார். 40 பந்துகள் பிடித்து 80 ரன்கள் எடுத்த அவர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தார். இதைவிட இன்னொரு சிறப்பு நேற்று ரஸ்ஸலுக்கு பிறந்தநாள். வெற்றிக்கு பின் தனது அணி சகாக்களுடன் பிறந்த நாள் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது இருக்கும் அவெஞ்சர்ஸ் சீசன் குறித்து பேசினார். அதில், ``நானும் அவெஞ்சர்ஸ் படங்களின் தீவிர ரசிகன். இந்தப் படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களை போல ரசிகர்கள் என்னையும் சூப்பர் ஹீரோ என அழைத்தார் மிகவும் மகிழ்ச்சியடைவேன். எல்லோரும் என்னுடைய அதிரடி ஆட்டத்துக்கான எனர்ஜி பற்றி தான் கேட்கிறார்கள். கண் மற்றும் கையை ஒரே நேர்கோட்டில் வைத்தல், பேட்டை சுற்றுவதில் நல்ல வேகம் ஆகியவை தான் என்னுடைய பலம். எப்போதும் தோள்பட்டையில் இருந்து பேட்டை சுழற்ற வேண்டும். இதற்கு முக்கியம் உடல்பலம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள் உயரமான ஷாட்களை அடிக்கலாம்.
பௌலர்கள் தாங்கள் புத்திசாலி எனக் காண்பிப்பதற்காக ஸ்லோவாக அல்லது வைடாக வீசுவார்கள். ஆனால் அதனை அவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஷாட்களாக ஆட வேண்டும். அடுத்த இரண்டு போட்டிகளை வெல்ல வேண்டும் என்ற முனைப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனை வென்றுவிட்டால் எனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் அது மறக்க முடியாததாக அமையும்" என மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.