கை விரலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஷிகர் தவான் விலக நேர்ந்துள்ளது. தவானுக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷப் பாண்ட் அணியில் இணைகிறார்.
உலகக்கோப்பை தொடரில் கடந்த 9-ந் தேதி ஆஸ்திரேவியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் துவக்க வீரர் ஷிகர் தவான் அதிரடி காட்டியதே வெற்றிக்கு காரணம் எனலாம். 109 பந்துகளில் 117 ரன்களை தவான் குவித்தார். இந்தப் போட்டியில் ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் இடது கை பெரு விரலை பதம் பார்த்தது.
மருத்துவ பரிசோதனையில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தவான், 2 அல்லது 3 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று முதலில் கூறப் பட்டிருந்தது.
இந்நிலையில் தவானுக்கு மீண்டும் சோதனை நடத்தியதில் காயம் குணமாக ஒரு மாதத்திற்கும் மேலாகும் என தெரிய வந்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து தவான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தவானுக்குப் பதிலாக இளம் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பாண்ட் அணியில் இணைகிறார். ரிஷப் பாண்டை உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாததற்கு ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையானது. இந் நிலையில், தவானுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே கூறலாம்.