உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பர்மிங்காமில் இன்று நடைபெறும் இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானதாகும். வங்கதேசத்தை வென்றால் இந்தியா அரையிறுதிக்குள் எளிதாக நுழைந்து விடும். அதே வேளையில் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க வங்கதேசம் இந்தப் போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டும். எனவே இரு அணிகளுமே வெற்றி பெற இந்தப் போட்டியில் பெரும் போராட்டம் நடத்த உள்ளதால் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பர்மிங்ஹாம் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார். ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுலே மீண்டும் களமிறங்குகிறார். ஆமை வேகம் காட்டி சாதிக்கத் தவறியதால் கேதார் ஜாதவ் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றுள்ளார்.
அதே போல் சுழலில் ரன்களை வாரிக் கொடுத்து வரும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, காயத்திலிருந்து விடுபட்ட புவனேஷ்குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சஹால் என்ற ஒரே ஒரு சுழலுடன் பும்ரா, சமி, புவனேஷ்குமார், பாண்ட்யா என்று 4 வேகங்கள் இன்றைய போட்டியில் வங்கதேசத்தை மிரட்ட உள்ளனர்.