மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 95 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. இதனால் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.
மே.இந்திய தீவுகளுக்கு சுற்துப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 போட்டிகளின் முதல் இரு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
புளோரிடாவின் லாடர் ஹில் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதற்கு கைமேல் பலனாக இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி மே.இந்தியதீவு வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து அறுவடை செய்தனர்.
வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ஜான் கேம்ப்வெல் டக்அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் லூயிஸ் டக் அவுட்டானார். தொடர்ந்து இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய நவ்தீப் சைனியின் வேகத்தில் ஹாட்மயர் (1) , பூரன் (20) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்ந்தனர். இதனால் மே.இந்திய தீவுகள் அணி திணறியது.பொல்லார்ட் மட்டுமே ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆட, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கிலேயே நடையைக் கட்டினர்.
நவ்தீப் சைனி வீசிய கடைசி ஓவரில் பொல்லார்டும் 49 ரன்கள் எடுத்து அவுட்டாக, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்களை மட்டுமே மே.இந்திய தீவுகள் அணி எடுத்தது.இந்தியத் தரப்பில் தமது அறிமுகப் போட்டியிலேயே அசத்திய நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
தொடர்ந்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது. 2016-ல் இதே மைதானத்தில் கடந்த டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 245 ரன்களை மே.இ.தீவுகள் குவித்தது. இந்தியா 244 ரன்கள் எடுத்து ஒரு ரன் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.