மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

by Nagaraj, Aug 5, 2019, 09:18 AM IST

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்று இந்தியா சாதித்தது. ரோகித் சர்மாவின் (67) அதிரடியால் இந்தியா 167 ரன்களை குவிக்க, தொடர்ந்து மே.இ.தீவுகள் அணி ஆடிய போது மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர் ஹில் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித்-ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தர ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் 23 ரன்களில் கீமோபால் வேகத்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கோஹ்லியும் அதிரடியை தொடர்ந்தார். ரன் மழை பொழிந்து அரைசதம் கடந்த ரோகித் சர்மா 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, தொடர்ந்து கோஹ்லியும் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன் பின் வழக்கம் போல, இந்தியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்ப, ரன் வேகம் குறைந்தது .

ரிஷப் பாண்ட் 4 ரன்களிலும், மணிஷ் பாண்டே 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.கடைசி ஓவரில் ஜடேஜாவும் (1), குர்னால் பாண்ட்யாவும் ( 2 ) மொத்தம் 3 சிக்சர்களை விளாச அந்த ஓவரில் 20 ரன்கள் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய மே.இந்திய தீவுகளுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்கள் லீவிஸ் (0), சுனில் நரைன் (4) அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதன் பின் பாவெல்-பூரன் ஜோடி நிலைத்து நின்றனர். பாவெல் (54)அதிரடி காட்ட, பூரன்(19) நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த போது இருவரையும் குர்னால் பாண்ட்யா அடுத்தடுத்து வெளியேற்றினார்.இந்நிலையில் 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

மழை தொடர்ந்ததால் ஆட்டம் தொடர முடியாமல் போனது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை குர்ணால் பாண்ட்யா தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது. மூன்றாவது போட்டி மே.இ.தீவுகளில் உள்ள கயானாவில் நாளை நடைபெற உள்ளது.

டி20 போட்டி; மே.இ தீவுகளை திணறடித்த இந்திய பந்து வீச்சு; அறிமுக போட்டியில் நவ்தீப் சைனி அபாரம்

READ MORE ABOUT :

Leave a reply