இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மிதாலி ராஜ், இனி டி-20 போட்டிகளில் விளையாடப்போவதில்லை என தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், டி-20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மூன்று உலக கோப்பை போட்டிகள் மற்றும் 32 டி-20 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு பல வெற்றிகளை ஈட்டியவர் மிதாலி ராஜ்.
மொத்தம் 89 டி-20 போட்டிகளை விளையாடியுள்ள மிதாலி ராஜ், அதிவிரைவாக 2000 டி-20 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி-20 உலக கோப்பையின் அரை இறுதி போட்டியில் ஆட வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், மிதாலி ராஜை அணியில் சேர்க்காததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இப்படி இருக்க, தற்போது தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி-20 போட்டியில் விளையாடவும் மிதாலி ராஜை பிசிசிஐ புறக்கணித்து விட்டது. இதனால், கடுப்பான மிதாலி ராஜ், இனி டி-20 போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இனி ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டி-20 போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வை அறிவித்தது, இந்திய அணிக்கு சாதகமாக இருக்காது என்பதே கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக எதிரொலிக்கிறது.