இந்தியா, வங்க தேச கிரிக்கெட் அணிகள் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இந்த முத்தரப்பு தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடும். 6 போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடத்தில் வரும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்யும்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத இடைவெளியே இருக்கும் நிலையில், இந்தப் தொடர் ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர் குறித்து இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா, `டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். யாரையும் சாம்பியன் ஆவார் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.
ஏனென்றால் இது அதைப் போன்ற ஒரு கிரிக்கெட் கேம். ஒன்றிரண்டு ஓவர்களில் ஆட்டத்தின் போக்கு முழுவதுமாக மாறக்கூடும்’ என்று கூறியவர், விராட் கோலிக்கு பதில் இந்திய அணியை வழிநடத்துவது குறித்து, `இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது மிகப் பெருமை வாய்ந்த விஷயம்.
கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனது ஆட்டம் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும். இளம் அணியுடன் களம் காணுகின்றோம். எனவே மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறோம்’ என்று நம்பிக்கைப் பொங்க பேசியுள்ளார்.