இந்தியா, வங்க தேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் டி20 தொடர் இலங்கையில் நேற்றுத் தொடங்கியது.
இந்தத் தொடரின் முதல் போட்டி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியை இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான குசால் பெரேரா, 37 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அவரது ஆக்ரோஷ ஆட்டமே இலங்கை வெற்றி பெற துணை புரிந்தது.
பெரேரா கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். முதலில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தினார் என்று கூறி ஐசிசி அவருக்கு விளையாடத் தடை விதித்திருந்தது. பின்னர் அந்தத் தடையை ஐசிசி விளக்கிக் கொண்டது. இதையடுத்து அவருக்கு பல்வேறு காயங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்ட வண்ணம் இருந்தன. இதையெல்லாம் கடந்து அவர் நேற்று அசாத்திய கம்-பேக் கொடுத்தார். ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து போட்டி குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார் பெரேரா. பெரேரா பேசுகையில், `இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு முன்னர் எனக்கு உடலில் நிறைய காயங்கள் இருந்தன. அதிலிருந்து நான் விடுபட்டு நன்றாக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா போன்ற அணியை எதிர்கொள்ளும் போது மிகுந்த ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். அப்படி செய்தால் மட்டுமே வெற்றி கிட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.