தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்தப் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட தேநீர் இடைவெளியின் போது, ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் டிகாக் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பெவிலியனில் இரு அணிகளும் தங்கும் அறைக்குப் பக்கத்தில் வார்னர் டிகாக்கை வம்பிழுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.
இது ஊடகங்கிளிலும் பரவலாக வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இந்நிலையில், இந்த ஒழுக்க மீறலுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, வார்னருக்கும் டிகாக்குக்கும் தண்டனை விபரங்களை அறிவித்துள்ளது. அதன்படி, வார்னருக்கு ஒரு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை விதிக்கப்படலாம். டிகாக்கிற்கு மேட்ச் ஃபைன் போடப்படலாம் என்று தெரிகிறது. இரு அணி நிர்வாகமும் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக பதில் கொடுக்க வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டுள்ளது.