இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் சமன் செய்துள்ளார்.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக பாபர் ஆஸம் 133 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் எடுத்தார்.
அதன் பிறகு எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் உபல் தரங்கா 112 ரன்கள் எடுத்தபோதும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அணியை தோல்வியடையச் செய்தனர். இதனால், பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதமடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
* பாபர் ஆஸம் இதுவரை 33 இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதுதான் பாகிஸ்தான் வீரர் ஒருவர் குறைந்த இன்னிங்ஸ்களில் அடிக்கும் அதிவேக சதமாகும். முன்னதாக முன்னாள் வீரர் ஜாஹிர் அப்பாஸ் 42 இன்னின்ஸ்களில் 7 சதம் வீசியிருந்தார்.
* இந்த சதத்துடன் பாபர் ஆஸம் ஐக்கிய அரபு நாட்டில் தொடர்ந்து 5 போட்டிகளில் சதம் விளாசியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடரின்போது மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சதம் விளாசி இருந்தார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் இந்தியாவில் தொடர்ந்து நான்கு சதங்களை விளாசினார். அதேபோல, ஜாஹிர் அப்பாஸ் மற்றும் சயீத் அன்வர் இருவரும் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசி இருந்தார்.
* ஒட்டுமொத்தத்தில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் சயீத் அன்வர் இருவர் மட்டுமே தொடர்ச்சியாக ஏழு சதங்களை விளாசி உள்ளனர். அந்த சாதனையை தற்போது பாபர் ஆஸம் சமன் செய்துள்ளார்.
* கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பாபர் ஆஸம் தன் முதல் சதத்தை அடித்தார். அதன் பிறகு அவர் 7 சதங்கள் அடித்துள்ளார். ஆனால், இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் 3 சதங்கள் மட்டுமே விளாசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே காலக்கட்டத்தில் 7 சதங்கள் அடித்த ஒரே வீரர் டேவிட் வார்னர் தான்.
* பாபர் ஆஸம் தன் முதல் 15 இன்னிங்ஸ்களில் 37.57 என்ற சராசரிதான் வைத்திருந்தார். 5 அரைச்சதம் மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால், அதன் பிறகு 18 இன்னிங்ஸ்களில் ஆஸமின் சராசரி 75.53 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதில் 7 சதங்களும் ஒரு அரைச்சதமும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.