நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, சிவம் துபே வீசிய 16வது ஓவரின் கடைசி பந்தை சந்தித்த அபிஷேக் ஷர்மா இரண்டாவது ரன் முயலும்போது ஷர்மாவும், ரஷித் கானும் ஒரே வரிசையில் ஓடி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் ரஷித் கான் தலையில் பலத்த அடிபட, அங்கேயே சுருண்டு விழுந்தார். இதே ஆட்டத்தில் இன்னொரு சன்ரைசர்ஸ் வீரரும் காயத்தால் அவதிப்பட்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் முதல் இன்னிங்சில் பந்து வீசிய போது, கணுக்கால் காயம் அடைந்து வெளியேறினார். முதல் ஆட்டத்திலேயே காயத்தால் சன்ரைசர்ஸ் வீரர்கள் அவதிப்பட்டது பெரும் கவலையளிக்கும் விஷயமாக அந்த அணிக்கு மாறியது.
இதற்கிடையே, மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறி உள்ளார். காயம் சரியான பிறகு அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை சன்ரைசர்ஸ் அணியும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளது.