ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (09-10-2020) போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் துபாயில் மோதின. முதலில் டாஸ் வென்று சன் ரைசஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் அதிகபட்சமாக வார்னர் 10 அரைசதங்களை அடித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய போட்டியிலும் அரைசதம் விளாசி அந்த சாதனையைத் தொடர்கிறார்.
ஐந்து போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை மட்டுமே பெற்றிருந்த பஞ்சாப் அணிக்கு நேற்றைய போட்டி முக்கியமான ஒன்றாகும். அந்த போட்டியிலும் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியைத் தழுவியது பஞ்சாப்.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க இணையான வார்னரும், பேர்ஸ்டோவும் இணைந்து பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களைச் சிதறடித்தனர். விழி பிதுங்கிய பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் 15 ஓவரை தொடக்க இணையின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அதிரடியாக விளையாடிய வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் சேர்ந்து 160 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்டோ 19 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ராகுல் தவறவிட்டதால், அணியின் போக்கே மாறியது. இந்த ஐபிஎல்2020 ன் இரண்டாவது மிகப்பெரிய தொடக்க இணையின் ரன் இதுவாகும்.
பின்னர் 16வது ஓவரை வீசிய ரவி பிஷோனாய் ஓவரில் வார்னர் ( 40 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சர் என 52 ரன்களை விளாசினார்) மற்றும் பேர்ஸ்டோ ( 55 பந்தில் 7 பவுண்டரி, 6 சிக்சர் என 97 ரன்களை விளாசினார்) இருவரும் அடுத்தடுத்த அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். பின்னர் ஹைதராபாத் அணி இருபது ஓவர் முடிவில் தனது முதல் 200 ரன்களை அடித்தது. இதனால் அணியின் ஸ்கோர் 201/6 ரன்களை எட்டியது.
பஞ்சாப் அணி சார்பில் ரவி பிஷோனாய் 3 விக்கெட்டுகளையும், நேற்றைய போட்டியில் புதியதாகக் களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இருபது ஓவரில் 202 ரன்களை அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க இணை இந்த முறை சொதப்ப, அணியின் தோல்வி தொடங்க ஆரம்பித்தது. பின்னர் அனைவரும் வரிசையாகப் பொடி நடை கட்டினர்.
ஒருபுறம் நிகோலஸ் பூரான் மட்டுமே நிலைத்து ஆடினார். இவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்கக் கூட ஆள் இல்லாமல் போனது பஞ்சாப் அணியில். அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரான் 37 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சர் அடித்து 77 ரன்களை விளாசித் தள்ளினார். பின்னர் வந்த அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். ஷமி, காட்ரல் மற்றும் அர்ஷ்தீப் சிங் என மூவரும் டக் அவுட் ஆகி வெளியேறப் பஞ்சாப் அணியால் இருபது ஓவர் முடிவில் 132 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி 6 போட்டியில் 3 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3 ம் இடத்தில் உள்ளது.நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்டிங் என அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர்.பஞ்சாப் அணியைப் பொறுத்தவரைச் சரியான பவுலிங் யூனிட் இல்லாதது தான் நேற்றைய தோல்விக்குக் காரணம். மேலும் மிடில் ஆர்டர்களின் சொதப்பலான ஆட்டமும் தோல்விக்கு முக்கிய காரணம்.