ராகுல் திராவிட் தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த கேரளாவை சேர்ந்த ரஞ்சி வீரர் சுரேஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47). 1991- 92 சீசனில் நியூசிலாந்து சென்ற ராகுல் திராவிட் கேப்டனாக இருந்த 19 வயதுக்குப்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர், கேரள ரஞ்சி கிரிக்கெட் அணியிலும், ரயில்வே ரஞ்சி அணியிலும் நீண்டகாலம் விளையாடியுள்ளார்.
1991 முதல் 2005 வரை கேரளா மற்றும் ரயில்வே அணிகளுக்காக ஏராளமான ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான சுரேஷ்குமார், 72 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 12 முறை 5 விக்கெட்டுகளையும், ஒரு சதமும், 7 அரை சதங்களும் உள்பட 1,658 ரன்களும் எடுத்துள்ளார்.ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் முதல் போட்டியிலேயே இவர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். 1994-95 சீசனில் வலிமை வாய்ந்த தமிழ்நாட்டைத் தோற்கடித்த கேரள அணியில் இவரும் இருந்தார்.
பாலக்காட்டில் நடைபெற்ற அன்றைய போட்டியில் 2 இன்னிங்சிலுமாக சுரேஷ்குமார் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த போட்டியில் தான் கேரளா முதன்முதலாக ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ் நாட்டை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ரஞ்சி சீசனில் சுரேஷ்குமார் 25 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் ரயில்வே அணிக்காக விளையாடி 60-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2000-01 சீசனில் ஆந்திராவுக்கு எதிராக நடந்த போட்டியில் 125 பந்துகளில் இவர் சதமடித்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் ராகுல் திராவிட ஒரு நிகழ்ச்சியில் சுரேஷ்குமார் குறித்துக் கூறியது: 1991-92 சீசனில் நியூசிலாந்துக்கு எதிராக 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் நான் கேப்டனாக இருந்தேன். ஒரு போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடியாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரரும், சுரேஷ்குமாரும் விளையாடினர். உத்தரப்பிரதேச வீரருக்கு இந்தி மட்டுமே தெரியும். சுரேஷ்குமாருக்கு இந்தி தெரியாது. மொழி தெரியாமல் இருவரும் எப்படி ரன்களை சேர்க்கப் போகிறார்கள் என நான் சிறிது கவலையில் இருந்தேன்.
ஆனால் இருவரும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். அப்போது தான் கிரிக்கெட் விளையாட மொழி தேவையில்லை, கிரிக்கெட் தான் மொழி என்று எனக்குத் தெரிந்தது என்று கூறினார்.சுரேஷ்குமார் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள திருவம்பாடி என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்துத் தெரியவில்லை. இவரது உடல் அடக்கம் நாளை நடைபெறுகிறது.