இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சாஹல், `என் எதிரிகள் என்னைப் பற்றிக் கணிப்பது கடினம்’ என்று பன்ச் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை தோனி வழிநடத்திய வரையில், ரவிசந்தர் அஷ்வினும் ரவீந்திரா ஜடேஜாவும்தான் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தனர். ஆனால், விராட் கோலி தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு கதை வேறு. அஷ்வினும் ஜடேஜாவும் ஓரங்கட்டப்பட்டு குல்தீப் யாதவும் சாஹலும் முன்னிலைப்டுத்தப்படுகின்றனர்.
இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டவர் சாஹல். ஒரே ஆண்டில் டி20 கிரிக்கெட் பௌலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார் அவர். இந்நிலையில் தனது பௌலிங் குறித்து பேசியுள்ள சாஹல், `தற்போதைய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது சுலபம். ஆனால், தொடர்ந்து நன்றாக விளையாடுவதுதான் கடினம்.
ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு இன்னும் கூடுதல் சவால் இருக்கும். என் பௌலிங்கை யாராலும் அவ்வளவு சீக்கிரம் கணித்து விட முடியாது. அப்படியே யாராவது என்னை கணித்துவிட்டால், அவரின் விளையாட்டு மீது அதிக கவனம் செலுத்தி ஒருபடி முன்னே சென்றுவிடுவேன்’ என்று வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.