இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.இந்திய கிரிக்கெட்டை கபில்தேவுக்கு முன் கபில் தேவுக்குப் பின் என இரண்டு காலக்கட்டகளாக பிரிக்கலாம். கபில் தேவுக்கு முந்தைய காலக்கட்டம் வரை இந்திய கிரிக்கெட்டிற்கு அவ்வளவாக ரசிகர்கள் கிடையாது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983ல் முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பின்னர் தான் இந்திய கிரிக்கெட்டின் புகழ் பரவ தொடங்கியது. அந்த சமயத்தில் உலக கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஜாம்பவானாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. அந்த அணியை இறுதிப் போட்டியில் இந்தியா தோற்கடித்தது யாராலும் மறக்க முடியாத சம்பவமாகும்.
கபில் தேவின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் தான் அந்த உலகக் கோப்பையை இந்தியாவால் வெல்ல முடிந்தது என்றால் அது மிகையல்ல. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் விளாசிய 175 ரன்கள் சாதனை நீண்டகாலம் ரசிகர் மனதில் நீடித்திருக்கும். இந்தியாவுக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கபில்தேவ், 3,783 ரன்களை குவித்துள்ளார். 253 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளை எடுத்தது அன்றைய காலகட்டத்தில் ஒரு சாதனையாக இருந்தது.இந்நிலையில் டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து கபில் தேவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை உடனடியாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் எனக் கூறினர். இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், இன்னும் ஒருசில தினங்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் கூறினர். இது குறித்து இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறுகையில், கபில் தேவுக்கு தற்போது பிரச்சினை எதுவும் இல்லை. அவரது மனைவியுடன் நான் பேசினேன். இப்போது நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார் என்று கூறினார்.