ஐபிஎல் நடப்பு சீசனில், நேற்றைய மும்பை ராஜஸ்தான் இடையேயான போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. ஒருபுறம் ஹர்டிக் பாண்டியா, மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் என அதிரடி மழையில் நேற்று ரசிகர்கள் நனைந்தார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஹர்டிக் பாண்டியா 21 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதற்கிடையே, ஹர்டிக் பாண்டியா பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் மண்டியிட்ட படி நிற்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் இனவெறி சர்ச்சையால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதை அடுத்து உலகம் முழுவதும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற இயக்கத்தின் மூலமாக இனவெறிக்கு எதிராக தங்களது கண்டனங்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பல்வேறு விளையாட்டுகளிலும் இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் முதன்முதலாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு மண்டியிட்டு ஆதரவு கொடுத்தனர். இந்தியாவில் முதல்முறையாக, ஹர்டிக் பாண்டியா தான் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்த இந்திய வீரராக அறியப்படுகிறார்.