ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். டி20 அணியில் மட்டும் இடம் பிடித்திருந்த கேரள வீரர் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். விரைவில் தந்தையாகப் போவதால் கேப்டன் விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த மூன்று அணிகளிலும் விளையாடும் வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். வீரர்கள் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. துணை கேப்டன் ரோகித் சர்மா எந்த அணியிலும் சேர்க்கப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் ஏற்பட்ட போதிலும் அவர் டி20 அணியில் சேர்க்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று தேர்வுக் குழுவின் அவசர கூட்டம் தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷியின் தலைமையில் கூடியது. கூட்டத்தில் வீரர்களின் காயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் புதிய வீரர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். அவரது காயம் முழுமையாகக் குணமடைவதற்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விராட் கோலிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் கடைசி மூன்று டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அடிலெய்டில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் அவர் ஊர் திரும்புகிறார். ஐபிஎல் போட்டியின்போது காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி டி20 போட்டியில் இடம் பெற்றிருந்தார்.
தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இன்னொரு தமிழக வீரரான நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் குணமடைந்தால் இஷாந்த் சர்மா டெஸ்ட் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படுவார். காயம் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா காயம் குணமடைந்த பின்னர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார். இதேபோல இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டியும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை. டி20 அணியில் இடம் பிடித்திருந்த கேரள வீரர் சஞ்சு சாம்சன் ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.