ஐந்தாவது முறையாக மகுடம் சூடிய மும்பை! தொடர்ச்சியாக நான்கு முறை தோல்வியுற்ற டெல்லி!

by Loganathan, Nov 11, 2020, 11:12 AM IST

இந்தாண்டில் பல பிரச்சனைகளுக்கு நடுவே ஒருவாறு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடத்தப்பட்டு, தொடரின் இறுதிப் போட்டியும் நடந்து முடிந்தது. பல பரபரப்புகளுக்கு நடுவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி வழக்கம்போல் பேட்டிங்கை தேர்வு செய்தது.

லீக் மற்றும் தகுதி சுற்று சேர்த்து நடந்த முந்தைய மூன்று போட்டிகளிலும் டெல்லி அணி, மும்பை அணியிடம் பரிதாபமாகத் தோற்றது. எனவே இந்த இறுதிப் போட்டியாலாவது வெற்றி பெற்று முதல் முறையாகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு இடம் கொடுக்காமல் டெல்லியை மீண்டும் ஒரு முறை பணிய வைத்தது மும்பை அணி.

முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய ஸ்டேய்னஸ் மற்றும் தவான் இணை ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிர்ச்சியளித்தனர். பவர்பிளே ஓவர்களை சிறப்பாக வீசும் ட்ரன்ட் போல்ட் பந்து வீச முதல் பந்திலேயே டி-காக்கிடம் கேட்ச்சாகி வெளியேறினார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டேய்னஸ். டெல்லி அணிக்கு முதல் பந்தில் விக்கெட் இழப்பது என்பது வாடிக்கையான ஒன்றுதான்.முக்கியமான போட்டிகளில் நான் மட்டும் தான் விளையாட வேண்டுமா என்ற கேள்வியோடு தவான் பெவிலியன் திரும்ப, டெல்லி அணியின் நிலை சென்னை28 படம் பாணியில் இருந்தது.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பர் ஃபண்ட் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினர். ஒருவழியாக ஃபண்ட் இந்த சீசனில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்து, அடுத்த ஆண்டிற்கு தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.மறுபுறம் போராடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடைசிவரை விக்கெட் இழக்காமல் 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர் என 65 ரன்களை விளாசினார்.

டெல்லி அணி முட்டி மோதி ஒரு வழியாக இருபது ஓவர் முடிவில் 156/7 ரன்களை சேர்த்தது. இதற்கு ஹைதராபாத் அணியே தகுதி சுற்றில் வெற்றி பெற்று இருக்கலாம் என்று ரசிகர்கள் முணுமுணுக்கும் அளவிற்கு நேற்றைய போட்டியில் டெல்லியின் பேட்டிங் அமைந்தது.இருபது ஓவர் முடிவில் 157 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது ரோகித் தலைமையிலான பேட்டிங் படை. பந்து வீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு எதிரியைத் திணறவைத்த போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுவரை சிறப்பான இன்னிங்க்ஸை ஆடாத கேப்டன் ரோகித் இந்த போட்டியில் ஆட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார். மெதுவாக இன்னிங்சை. தொடங்கினாலும், தனது கேப்டன் இன்னிங்க்ஸை சிறப்பாக ஆடினார். எனக்கே அணியில் இடமில்லையா என்ற கேள்விக்கு நேற்றைய போட்டியில் தனது ஸ்டையிலில் பதிலளித்தார் ரோகித்.டி-காக் 20 மற்றும் சூர்ய குமார் யாதவ்19 ரன்களில் வெளியேற கேப்டன் ரோகித் 51 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர் களை விளாசி 68 ரன்களை அணிக்குப் பரிசாக அளித்தார்.

மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களான பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஒற்றைய இலக்கத்தில் வெளியேற இஷான் கிஷானின் பொறுப்பான ஆட்டத்தால் 157 ரன்களை 18.4 ஓவரில் எட்டி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை டெல்லியிலும் இருந்து பிடுங்கியது மும்பை அணி.டெல்லி அணி சார்பாக நோர்ட்ஜா சிறப்பாகப் பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் ட்ரன்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

You'r reading ஐந்தாவது முறையாக மகுடம் சூடிய மும்பை! தொடர்ச்சியாக நான்கு முறை தோல்வியுற்ற டெல்லி! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை