செங்கல்பட்டு கூவாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. செங்கல்பட்டு - கூவத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வருகின்றனர். 13 வயதுக்கு கீழுள்ள இந்த சிறுமிகள் கபடியில் சாதிக்க வேண்டும் என்று துடிப்புடன் விளையாடி வருகின்றனர். ஆனால், கொரோனா லாக் டவுன் இவர்களின் பெற்றோர்களின் வாழ்க்கையை புரட்டி போட, போதுமான நிதி வசதி இல்லாமல் வெளியூர் மற்றும் வெளிமாநில போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.
தேவையான உணவுகள், பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர் இந்த 15 சிறுமிகளும். இவர்களின் நிலைமை சுரேஷ் ரெய்னாவுக்கு தெரியவர, ``கபடி மூலம் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த சிறுமிகள் விளையாடி வருகின்றனர். தயவு செய்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து உதவுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.