போதைப் பொருள் பயன்படுத்த என்னை சிலர் கட்டாயப்படுத்தினர் பிரபல வேகப்பந்து வீச்சாளர் தகவல்

by Nishanth, Nov 24, 2020, 17:11 PM IST

அதி வேகத்தில் பந்து வீச வேண்டும் என்றால் போதைப் பொருள் பொருள் பயன்படுத்த வேண்டும் என்று என்னைச் சிலர் கட்டாயப்படுத்தினர் என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறினார்.பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரின் பந்துவீச்சைக் கண்டு மிரளாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி பல பேட்ஸ்மேன்களை இவர் நிலைகுலைய வைத்துள்ளார்.

இவருக்கு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற பெயரும் உண்டு. இவரது பந்துவீச்சு பல முன்னணி வீரர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கர் இவரது பந்துவீச்சைக் கண்டு பயப்படமாட்டார்.டெண்டுல்கருக்கு பந்து வீசுவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சோயப் அக்தரும் அடிக்கடி கூறி உள்ளார்.

1997ல் தான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சோயப் அக்தர் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தொடங்கினார். கடைசியாக 2007ல் இந்தியாவுடன் நடந்த போட்டிக்குப் பின்னர் இவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இதுவரை சோயப் அக்தர் 46 டெஸ்ட் போட்டிகளிலும், 163 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 15 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும் இவர் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் போதைப் பொருள் தடுப்புத் துறை நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சோயப் அக்தர் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியது: நான் பாகிஸ்தான் அணிக்காக விளையாடத் தொடங்கிய சமயத்தில் அதிவேகத்தில் பந்து வீச வேண்டும் என்பது தான் எனது குறிக்கோளாக இருந்தது. இதற்காக நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். தீவிர பயிற்சியின் காரணமாகத் தான் என்னால் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச முடிந்தது. என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் தொடக்கக் கட்டத்தில், அதிவேகத்தில் பந்து வீச வேண்டும் என்றால் போதைப் பொருள் பயன்படுத்துங்கள் என்று என்னிடம் சிலர் கூறினர். ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை. வேகத்தில் பந்து வீசவேண்டும் என்பதற்காக எந்தக் காரணம் கொண்டும் போதைப் பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

More Sports News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை