உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மாவுக்கு நான் பந்துவீச மிகவும் ஆவலாக உள்ளேன். அவர்கள் இருவரும் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகிலேயே தலைசிறந்த கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகில் அனைத்து முன்னணி வீரர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகின்றனர். கோடிக்கணக்கில் பணம் கொட்டுவது தான் இதற்கு காரணமாகும். ஐபிஎல் தொடக்க வருடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களும் விளையாடினர். முதல் சீசனில் சோயப் அக்தர், சாஹித் அப்ரிடி உள்பட 11 பாக். வீரர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அதன் பின்னர் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டியில் சேர்க்க வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இதன்பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட வில்லை. ஆனால் இரண்டாவது சீசனிலும் பாக். வேகப்பந்து வீச்சாளர் அசார் மகமூது மட்டும் விளையாடினார். அவருக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட் இருந்ததால் அவர் விளையாட அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவரும் விளையாட வரவில்லை. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவிலும் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.
இந்நிலையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியது: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் உலகிலேயே மிகச்சிறந்த லீக் கிரிக்கெட் போட்டிகளான ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியான பிஎஸ்எல் போட்டிகளில் இணைந்து விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாகும். இந்த இரு லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது வீரர்களுக்கு நல்ல பலனைத் தரும். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு பந்துவீச வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடினால் நான் ஒரு அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வேன். மற்ற விளையாட்டுக்களை போலவே கிரிக்கெட்டிலும் அரசியலை கலக்கக் கூடாது. விராட் கோஹ்லியுடன் பாக். வீரர் பாபர் ஆசமை ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டால் அவருக்கு எதிராக பந்து வீசுவது சிரமமாக இருக்கும். இவ்வாறு ஆமிர் கூறினார்.