வயது ஏறினாலும் வேகம் குறையவில்லை என்று தன்னுடைய 40வது வயதில் பாக். முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி நிரூபித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் லங்கன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 20 பந்துகளில் அதிரடியாக ஆடி இவர் அரை சதம் அடித்தார். ஆனாலும் அவரது அணி தோல்வி அடைந்தது.இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் விளையாட உலகின் முன்னணி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வருகின்றனர்.
கோடி கோடியாகப் பணம் கொட்டுவது தான் இதற்குக் காரணமாகும். முதல் ஐபிஎல் போட்டியில் மட்டும் தான் பாக். வீரர்களும் விளையாடினர். இதன் பின்னர் அரசியல் காரணங்களுக்காக பாக். வீரர்களுக்கு ஐபிஎல்லில் அனுமதி மறுக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த போட்டியாகக் கருதப்படும் ஐபிஎல்லில் விளையாட முடியாதது பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரும் நஷ்டம் என்று முன்னாள் வீரர் அப்ரிடி உட்படப் பல பாக். வீரர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையிலும் இந்த வருடம் முதல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்கு லங்கன் பிரீமியர் லீக் என (எல்பிஎல்) பெயரிடப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.லங்கன் பிரீமியர் லீக்கில் கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், ஜாப்னா ஸ்டாலியன்ஸ், காலே கிளாடியேட்டர்ஸ் மற்றும் டம்புல்லா வைக்கிங் என்ற 5 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் நேற்று பாக். முன்னாள் அதிரடி வீரர் சாகித் அப்ரிடி தலைமையிலான காலே கிளாடியேட்டர்ஸ் அணியும், இலங்கை வீரர் திசாரா பெரேரா தலைமையிலான ஜாப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த காலே கிளாடியேட்டர்ஸ் அணி 175 ரன்கள் குவித்தன.
ஆனாலும் மூன்று பந்துகள் மீதம் வைத்து ஜாப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி பெற்றது. காலே அணி முதலில் விளையாடியபோது 13.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அப்போது 6வது வீரராகக் களமிறங்கிய அப்ரிடி அதிரடியாக ஆடி 20 பந்தில் அரை சதம் அடித்தார். 18வது ஓவரின் கடைசி பந்தில் பந்தில் அப்ரிடி ஆட்டம் இழந்தார். அதற்குள் அவரது அணி 155 ரன்களை எடுத்திருந்தது. அப்ரிடியின் அணியில் அவர் மட்டுமே சிறப்பாக ஆடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாப்னா அணியில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆவிஷ்கா பெர்னாண்டஸ் சிறப்பாக ஆடினார். அவர் 63 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தான் ஜாப்னா வெற்றி பெற்றது.