திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசம் தன்னை பலாத்காரம் செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் பாபர் அசம். 2016ல் மேற்கிந்திய அணிக்கு எதிராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2,045 ரன்களை குவித்துள்ளார். 77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,580 ரன்களும், 44 டி20யில் விளையாடி 1,681 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இவர் 15 அரை சதங்களும், 5 சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 16 அரை சதங்களும், 12 சதங்களும் அடித்துள்ளார்.
டி20 போட்டியில் 16 சதங்களை எடுத்துள்ளார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் இவர், ஐசிசி தரவரிசையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றிலும் முதல் 5 இடத்தில் இடம்பெற்றுள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே. பாகிஸ்தான் தேசிய அணியில் இவர் தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக உள்ளார். தற்போது நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி சென்றுள்ளது. இந்நிலையில் பாபர் அசமுக்கு எதிராக பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம்பெண் பலாத்கார புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமாபாத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது: பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசமும், நானும் பள்ளி முதலே ஒன்றாக படித்தோம். இருவரும் தீவிரமாக காதலித்து வந்தோம். 2010ல் என்னை அவர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
இதன் பின்னர் நாங்கள் மிகவும் நெருக்கமாக பழகத் தொடங்கினோம். கடந்த 10 வருடங்களாக என்னை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து வந்தார். தற்போது என்னை அசம் திருமணம் செய்ய மறுத்து வருகிறார். அவருக்கு நான் தொடக்கத்தில் ஏராளமாக பண உதவியும் செய்துள்ளேன். எங்களுக்கிடையே இருக்கும் நெருக்கம் குறித்து இரு வீட்டினருக்கும் நன்றாக தெரியும். என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் கூறியபோது, என்னை தாக்கி கொடுமைப்படுத்தினார். மேலும் கொன்று விடுவேன் என மிரட்டவும் செய்தார். இவ்வாறு அவர் கூறினார். இந்த புகார் தொடர்பாக இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ, பாபர் அசமோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.