காயம் சீக்கிரம் குணமாகாமல் இருக்கட்டும் வார்னர் குறித்த ராகுலின் கருத்தால் சர்ச்சை

by Nishanth, Nov 30, 2020, 17:33 PM IST

நேற்று சிட்னியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய வீரர் வார்னருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போட்டியின் முடிவில் கே.எல்.ராகுலிடம் கருத்துக் கேட்டபோது வார்னரின் காயம் சீக்கிரம் குணமாகாமல் இருக்கட்டும், அப்போது தான் இந்திய அணிக்கு நல்லது என்று கூறினார். ராகுலின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 ஒருநாள் போட்டிகள் சிட்னியில் நடந்து முடிவடைந்துள்ளன.

இந்த இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா அபாரமாக வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 60க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. இந்த இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய 370க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்களது திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இதில் தொடக்க ஜோடிகள் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் மிக அற்புதமாக ஆடினார்கள். இருவரும் இரண்டு போட்டியிலும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். வார்னர் முதல் போட்டியில் 69 ரன்களும், இரண்டாவது போட்டியில் 83 ரன்கள் குவித்தார்.இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா உள்பட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கினர்.

இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியின் போது டேவிட் வார்னர் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பந்தைப் பிடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக போட்டியிலிருந்து விலகினார்.

மைதானத்திலிருந்து செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு அவர் நடந்து சென்றார். அவரது காயம் சற்று அதிகமாக இருப்பதால் அடுத்த ஒருநாள் போட்டியிலும், தொடர்ந்து நடைபெற உள்ள 3 டி20 போட்டியிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் இந்திய வீரர் கே.எல்.ராகுலிடம் வார்னரின் காயம் குறித்துக் கேட்டபோது, வார்னரின் காயம் எந்த அளவுக்கு உள்ளது எனத் தெரியவில்லை.

ஆனாலும் அவர் சீக்கிரம் குணமாகாமல் இருக்க வேண்டும். அவர் குணமடையாமல் இருந்தால் தான் இந்திய அணிக்கு நல்லது என்று கூறினார். ராகுலின் இந்தக் கருத்து தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You'r reading காயம் சீக்கிரம் குணமாகாமல் இருக்கட்டும் வார்னர் குறித்த ராகுலின் கருத்தால் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை